ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சம்வர்த்தினி நியாஸ், `கர்ப்ப சன்ஸ்கார்’ என்ற பெயரில் ஒரு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கலாசாரம் மற்றும் பழைமைவாதத்தைக் கற்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி ஜவஹர்லால் தேசிய பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணக்கப்பட்ட நிகழ்வில் இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்தப் பிரசாரத்தில், ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்களுடன் இணைந்து செயல்பட உள்ளனர். இவர்கள், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சியுடன், கருவில் இருக்கும் குழந்தைக்கு கீதை, ராமாயணம் பயிற்றுவிப்பார்கள். இந்தத் திட்டம் கருவுற்றது முதல் இரண்டு வயது குழந்தைகள் வரை தொடரும்.
இந்தப் பிரசாரத்தில் பகவத் கீதை ஸ்லோகங்கள் மற்றும் ராமாயணத்தையும் சொல்லிக் கொடுப்போம் என்று சம்வர்த்தினி நயாஸ் தேசிய அமைப்பு செயலாளர் மாதுரி மராத்தே கூறினார்.
வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு 500 வார்த்தைகள் வரை புரியும். இந்தப் பிரசாரத்தின் நோக்கம், கருவில் இருக்கும் குழந்தைக்கு கலாசாரம் மற்றும் மதிப்புகள் கற்றுக்கொள்வதை உறுதி செய்வதாகும். இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக, சுமார் 1000 பெண்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளோம்” என்றும் கூறினார்.

அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரஜனி மிட்டல் கூறுகையில், ”ராமர் போன்ற குழந்தைகளைப் பெற்றெடுத்தால் தாய்மார்கள் மகிழ்ச்சியடைவர்” என்றார்.