மாந்தை மணல் அகழ்வு விவகாரம்: பொலிஸ் அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை!


மன்னார் – மாந்தை மேற்கில் சட்டவிரோதமாக இடம் பெறும் செயற்பாடுகளுக்கு முழுக்க முழுக்க
ஆதரவாக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செயல்படுகிறார். எனவே அவர்
எந்த வகையிலும் எமது பிரதேசத்திற்குப் பொருத்தமானவர் இல்லை. அவரை இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என
ஆத்திமோட்டை கமக்கார அமைப்பின் செயலாளர் ஐ.கணேசபதி தெரிவித்துள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள ஆத்திமோட்டை கிராமத்தில் கடந்த
வெள்ளிக்கிழமை(03.03.2023) சட்ட விரோதமான முறையில் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்
ஒருவரின் தலைமையில் மணல் அகழ்வு இடம்பெற்ற நிலையில், அதனைத் தடுத்து நிறுத்த
நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் மீது சனிக்கிழமை (04.03.2023) காலை தாக்குதல் சம்பவம்
இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் கிராம மக்கள் கடமையிலிருந்த அரச உத்தியோகஸ்தர்கள் மீது
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு கடுமையான அச்சுறுத்தலும்
விடுக்கப்பட்டுள்ளது.

மாந்தை மணல் அகழ்வு விவகாரம்: பொலிஸ் அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை! | The Police Officer Should Be Transferred

மணல் அகழ்வு

இது தொடர்பாக ஆத்திமோட்டை கமக்கார அமைப்பின் செயலாளர் ஐ.கணேசபதி
தலைமையில் ஆத்திமோட்டை கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் இணைந்து இன்றைய தினம்
வியாழக்கிழமை (09.03.2023) மன்னாரில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஆத்திமோட்டை கமக்கார அமைப்பின் செயலாளர்
ஐ.கணேசபதி,

ஆத்திமோட்டை கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (03.03.2023) மற்றும் சனிக்கிழமை (04.03.2023) ஆகிய
இரு தினங்கள் சட்டவிரோத மணல் அகழ்வு சம்பவமும், அதனைத் தடுத்து நிறுத்த
சென்றவர்கள் மீது தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆத்திமோட்டை கிராமத்தில் உள்ள அரச காணியில்
நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் றொஜன் அனுமதிப் பத்திரம் எதுவும் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தார்.

உடனடியாக மணல் அகழ்வை நாங்கள் அவதானித்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேச
செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம்.

மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கி உள்ளமை தொடர்பாக வினவிய போது எவ்வித அனுமதியும்
வழங்கவில்லை என தெரிவித்தார்.

மாந்தை மணல் அகழ்வு விவகாரம்: பொலிஸ் அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை! | The Police Officer Should Be Transferred

பிரதேச சபை உறுப்பிர் தலைமையில் குழு

குறித்த மணல் அகழ்வு குறித்து பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்த
நிலையில் அவர் அவ்விடத்திற்குக் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்து
நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் தலைமையிலான மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தி
நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் இலுப்பைக்கடவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு
பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்ல கோரிக்கை விடுத்து நாங்கள் அங்கிருந்து
சென்றோம்.

பிரதேச செயலாளரினால் வாகனம் இலுப்பைக்கடவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போதும்
குறித்த வாகனத்தை பொலிஸார் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்திற்குக் கடைசி வரை
கொண்டு செல்லவில்லை.

மறுநாள் சனிக்கிழமை (04.03.2023) குறித்த வாகனத்தை அவ்விடத்திலிருந்து பொலிஸ்
நிலையத்திற்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்ட போது நானாட்டான் பிரதேச
சபை உறுப்பினர் தலைமையில் குழு ஒன்று வந்து அவ்விடத்தில் கடமையிலிருந்த
கிராம அலுவலர் மற்றும் காணிக்குப் பொறுப்பான அதிகாரிகளையும் தகாத
வார்த்தைகளினால் பேசியதோடு சற்று தொலைவில் நின்ற என்னைப் பிடித்து கடுமையாகத்
தாக்கினார்கள்.

இதன் போது அங்குக் கடமையின் நிமித்தம் வருகை தந்த இரு பெண் கிராம அலுவலர்களையும்
குறித்த கும்பல் காட்டுக்குள் துரத்திச் சென்றனர். இதனால் குறித்த இரு பெண்
கிராம அலுவலகர்களும் பாரிய சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மாந்தை மணல் அகழ்வு விவகாரம்: பொலிஸ் அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை! | The Police Officer Should Be Transferred

இலுப்பைக்கடவை பொலிஸார்

இவ்வாறு சம்பவம் இடம் பெற்றுக் கொண்டு இருந்த போது இலுப்பைக்கடவை பொலிஸார்
சம்பவ இடத்திற்கு வருகை தரவும் இல்லை.பொலிஸார் குறித்த விடையத்தைக் கவனத்தில்
கொள்ளவும் இல்லை. எமது பாதுகாப்பை அவர்கள் கருத்தில் கொள்ளவும் இல்லை.

குறித்த நடவடிக்கைக்கு எதிராக பொலிஸார் இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கைகளையும்
மேற்கொள்ளவில்லை.

நானாட்டான் பிரதேச சபை உறுப்பினரான றொஜன் என்பவர் மாந்தை மேற்கு பிரதேச
செயலாளர் பிரிவில் உள்ள எமது கிராமத்தில் மேற்கொண்ட சட்ட விரோத நடவடிக்கை
மற்றும் எம் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய
விடயம். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்
நிறுத்தப்பட வேண்டும்.

இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் தொடர்பில் சில
விடயங்களைக் கூறவேண்டிய நிலை உள்ளது.

குறித்த சட்டவிரோத மண் அகழ்வு குறித்து இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு பல தடவை
தெரியப்படுத்தி இருந்தோம். பிரதேச செயலாளரும் பொலிஸாருக்கு பல தடவை கோரிக்கை
விடுத்திருந்தார்.

ஆனால், பொலிஸார் எங்களுக்கு எவ்விதமான சாதகமான நடவடிக்கைகளையும்
மேற்கொள்ளவில்லை. இலுப்பைக்கடவை பொலிஸார் மணல் மாபியாக்கலுக்குச் சார்பாக நடந்து
கொண்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. குறித்த பிரச்சினையை
நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லாத வகையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
செயல்பட்டு வருகிறார்.

மாந்தை மணல் அகழ்வு விவகாரம்: பொலிஸ் அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை! | The Police Officer Should Be Transferred

பொருத்தமானவர் இல்லை

இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் மணல் மாபியாகளுக்கும்
இடையில் தனிப்பட்ட தொடர்புகள் உள்ளமை தெரிய வருகிறது.

எனவே இப்பிரதேச மக்கள் சார்பாக நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை உடன் அமுலுக்கு
வரும் வகையில் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட
வேண்டும்.

நான் தாக்கப்பட்டு வைத்தியசாலையிலிருந்தபோது என்னைப் பார்க்க வந்த அமைச்சர்
காதர் மஸ்தான் இடமும் இக்கோரிக்கையை முன் வைத்துள்ளேன்.

மாந்தை மேற்கில் சட்டவிரோதமாக இடம் பெறும் செயற்பாடுகளுக்கு முழுக்க முழுக்க
ஆதரவாக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செயல்படுகிறார்.

எனவே அவர் எந்த வகையிலும் எமது பிரதேசத்திற்குப் பொருத்தமானவர் இல்லை.

எனவே இப்பிரதேச மக்கள் சார்பாக நாங்கள் முன் வைக்கும் கோரிக்கை உடன் அமுலுக்கு
வரும் வகையில் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட
வேண்டும்.

மேலும் எமது பிரதேசத்தில் உள்ள அரச காணிகள் பிடிக்கப்பட்டு
வருகிறது.

காணி மாபியாக்களினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் உள்ள காணி நிர்வாக கிளையே இதற்கு முழு
காரணம். குறித்த காணி கிளையில் உள்ள சில பொறுப்பு அதிகாரிகள் இவ்விடயத்தில்
முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். 

எனவே, மாந்தை மேற்கு பிரதேசத்தில் இடம்பெற்ற அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளும்
தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் எமக்கு எதிராக மண் மாபியாக்களினால்
முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட
வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.