நீர், நிலம், காற்று ஆகியவை உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானவை. ஆனால் இன்று சில பணக்காரர்களின் சுயநலத்துக்காக இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இயற்கை காக்கா குருவிக்கு கூட சொந்தமானது என்று பேசுபவர்கள் சக மனிதனுக்கும் சொந்தமானது என்பதை உணர்வதில்லை.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளால் வெள்ளம், வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. வெள்ளம் வராமல் தடுப்பதற்கும், நீராதாரத்தை பாதுகாப்பதற்கும் அரசு முயற்சிகள் மேற்கொள்கிறது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர் விசாரணையில் உள்ளது. ஆனால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளாக கருதப்படுவது பெரும்பாலும் மக்களின் குடியிருப்புகளாக மட்டும் இருப்பது தான் சிக்கல்.
சென்னையில் மட்டும் எண்ணற்ற குடியிருப்புகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில் அகற்றப்பட்டுள்ளன.இதனால் மக்களின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட வாழ்வாதாரம் பாதிப்படைகின்றன. சென்னை சத்யவாணி முத்து நகர், கொளத்தூர் அவ்வை நகர், இராஜா அண்ணாமலை புறம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பல குடியிருப்புகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளாக கருதி அகற்றப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை உயர் நீதிமன்றம், குடியிருப்பாக , வணிகக்கட்டிடமாக இருந்தால் மட்டுமே ஆக்கிரமிப்பு இல்லை என்று உறுதி செய்த பின்னரே நிலம் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மற்றும் குடியிருப்புகள் அகற்றம் குறித்து நகர்ப்புற நில உடைமை மற்றும் வாழ்வுரிமை கூட்டமைப்பு சேர்ந்த செபாஸ்டியனிடனிடம் பேசினோம். அவர் ”பல வணிகக்கட்டிடங்கள் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. ஆனால் குடியிருப்புகள் மட்டுமே தொடர்ந்து அகற்றப்படுகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. அகற்றப்படும் மக்களுக்கு எந்த வித நஷ்ட ஈடும் கொடுக்க்கப்படுவதில்லை. 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் மக்களை நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று அகற்றும் போது, அவர்களுக்கான மாற்று இடம் நகருக்குள்ளேயே கொடுக்க வேண்டும். ஆனால் மக்கள் சென்னைக்கு வெளியில் தள்ளப்படுகின்றனர். இதுவரை அகற்றப்பட்ட மக்கள் சிலருக்கு வீடுகளும் கொடுக்கப்படவில்லை.
பல இடங்களில் நீர்நிலை இருந்ததாக பொய் சொல்லியும் மக்களின் குடியிருப்பை அகற்றியுள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக கொளத்தூர் அவ்வை நகரை சொல்லலாம். பெருமாள் தாங்கல் என்ற நீர்நிலை இருப்பதாக கூறி அங்குள்ள வீடுகளை இடித்தனர். ஆனால் அங்கு மக்கள் 60 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். நீர்நிலை இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. இவ்வாறான அரசு நடவடிக்கையால் அகற்றப்பட்ட மக்களின் வேலை, குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மறுக்கப்படுகிறது. இந்த மக்களுக்கு, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் அளிக்கும் வீடுகளின் கட்டடங்கள் தரமானதாக இல்லை. வீடுகளுக்கான பணத்தையும் மக்களிடமே வசூலிக்கிறார்கள். இதனால் ஏழை எளிய மக்கள் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். எதிர்காலத்தில் இன்னும் பல குடியிருப்பு பகுதிகளை அகற்ற அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் வனிக கட்டிடங்கள் பெரும்பாலும் அகற்றப்படுவதில்லை. மக்களின் குடியிருப்புகளை அகற்றி கார்ப்பரேட் வணிக மேம்பாட்டுக்கு தாரை வார்க்க அரசு திட்டமிடுகிறது.
சென்னை நகரத்திலிருந்து அகற்றி, செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் மறுகுடியமர்த்தப்பட்ட மக்களுக்க்காக செயல்படும் செயற்பாட்டாளர் இசையரசிடம் பேசினோம். அவர் சென்னையை உருவாக்கிய உழைக்கும் மக்களை நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயரில் அகற்றினர். அகற்றப்பட்ட மக்களுக்கு அரசு தற்போது கொடுத்திருக்கும் இடமும் நீர்நிலை ஆக்கிரமிப்பு தான். மழைக்காலங்களில் செம்மஞ்சேரியிலும், கண்ணகி நகரிலும் உள்ள வீடுகள் முழுதும் தண்ணீராக தான் இருக்கும்.
அந்நேரங்களில் மக்களுக்கு மின்சாரம், சாப்பாடு போன்ற அடிப்படை தேவை கூட கிடைக்காது. இங்குள்ள மக்கள் கல்விக்காகவும், வேலைக்காகவும் தினமும் காலையில் ஒன்றரை மணி நேரம் பேருந்தில் பயணிக்கிறார்கள். ஆனால் சென்னைக்குள் இவர்கள் வாழ்ந்த இடங்கள் தற்போது கட்டிடங்கள் கட்டுவதற்கும் குப்பைகள் கொட்டுவதற்கும் பயன்படுகிறது. கூவம் நதிக்கரையோரம் இருந்த சத்தியாவாணி முத்துநகர் குடியிருப்புகளை வலுக்கட்டாயமாக அகற்றினர். ஆனால் தற்போது மியாவாக்கி காடுகள் வளர்ப்பதாக செய்தி வருகிறது. சென்னையை கட்டமைத்த மக்களை வெளியேற்றிவிட்டு யாருக்காக காடுகள் வளர்க்கிறார்கள் பாதுகாக்கிறார்கள்? இயற்கையின் ஒரு அங்கம் தான் மனிதனின் வாழ்விடம்” என்றார்.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜோதிலட்சுமியிடம் பேசினோம். அவர் ”2015 வெள்ளத்திற்கு பிறகு தான் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நீதிமன்றம் தீவிரம் காட்டுகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளாக வணிக கட்டிடங்கள் இருந்தாலும், குடியிருப்புகளாக இருந்தாலும் அகற்ற வேண்டும் என்பது தான் உயர்நீதிமனற உத்தரவு. ஆனால் பணம் இருப்பவர்களின் வணிக கட்டிடங்கள் பணம்பலத்தால் இடிக்கப்படாமல் இருக்கலாம். மக்களின் குடியிருப்புகள் எளிதில் அகற்றபடுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் ஆர்டிகல் 21 கூறும் வாழ்தலுக்கான அடிப்படை உரிமையின் கீழ் இவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும். நீதிமன்றத்தின் நோக்கம், நீராதாரம் பாதுகாக்க வேண்டும் என்பதே தவிர குடியிருப்புகள் அகற்றமல்ல. ஏழை எளிய மக்கள் வீடு வாங்க வாய்ப்பும் வசதியும் இல்லாமல் இவ்வாறு நீர்நிலை ஓரங்களில் குடிசையிட்டு வாழ்கின்றனர். மக்கள் தொகை அதிகமுள்ளதால் இச்சிக்கல் உள்ளது. சென்னையில் மக்கள் தொகை அதிகமாவதை கட்டுப்படுத்த அரசு திட்டங்கள் தீட்டுவது அவசியம்” என்றார்.