பாட்னா: தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியபீகாரை சேர்ந்த ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெஹெர்கா ரயில் நிலையத்தில் போர்ட்டராக பணிபுரிந்து வரும் பிரசாந்த் குமாரை தமிழ்நாடு போலீசார் கைது செய்துள்ளனர். பீகாரில் கைது செய்யப்பட்ட பிரசாந்த் குமாரிடம் தமிழ்நாடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தங்கி வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில நாட்களில் சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் பீகார் உள்பட வடமாநிலங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு,’ சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ போலியானது’ என்று விளக்கம் அளித்தார்.
இதுபற்றி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோரும் கவலை தெரிவித்ததோடு போலி வீடியோ பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்ட மேலும் ஒருவரை பீகாரில் தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர்.