புதுடெல்லி: ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு, அதானி குழும விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் அமளி காரணமாக தொடர்ந்து மூன்றாவது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் புதன்கிழமையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ம் தேதி திங்கள்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளும், ராகுல் காந்தியின் லண்டன் பேச்ச தொடர்பாக ஆளுங்கட்சியினரும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரண்டு அவைகளும் கடந்த இரண்டு நாட்களாக நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், மூன்றாவது நாளான இன்று மக்களவை நடவடிக்கைகள் தொடங்கியதும் எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் மாநிலங்களவையும் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
மூன்றாவது நாளாக முடக்கம்: மதியம் மீண்டும் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் மக்களவையில், ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் விதமாக அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர். இந்த அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் மதியம் மீண்டும் நடவடிக்கைகள் தொடங்கியதும் ஆளுங்கட்சியினர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். இதற்கிடையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து அமலாக்கத் துறை அலுவலகம் வரை சென்று புகார் கொடுக்க இருந்தனர். அதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் பேச முயல்கையில், ஆளுங்கட்சியினரின் முழங்கங்களால் அவரால் பேச முடியவில்லை. இந்தத் தொடர் அமளியால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் பேரணி: காலையில் இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதானி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் புகார் அளிக்கும் நோக்கில், நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சியினர் பேரணியாகச் சென்றனர். முன்னதாக, நாடாளுமன்றம் கூடுவதற்கு முன், அதானி விவகாரத்தில் ஒரு கூட்டு முடிவினை எடுப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்கட்சி தலைவர் அறையில் கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர். அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பேரணி சென்றனர்.
அனுமதி இன்றி பேரணியாகச் சென்றதால் எதிர்கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். முன்னதாக, நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள சாலையில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அதேபோல், நாடாளுமன்றத்தின் முன்பு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது: “நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்பதற்கு இந்த அரசாங்கம் நாடாளுமன்றத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதே சாட்சி. ஒரு தொழிலதிபரைக் காப்பாற்ற அரசு ஜனநாயகத்தை மோடி அரசு குழிதோண்டி புதைத்து பலவீனப்படுத்துகிறது” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநடே தெரிவித்தார்.