சேலம்: சேலம் சரகத்தில் போக்சோ வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் விழிப்புணர்வை விட, பெற்ேறாரின் பொறுப்புணர்வே இதற்கு நிரந்தர தீர்வு தரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் போக்சோ சட்டம் கடந்த 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 18 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு எந்தவிதமான தொந்தரவு ஏற்பட்டாலும் இச்சட்டம் அவர்கள் மீது பாயும். தவறான நோக்கத்தில் பார்த்தாலும், சீண்டலில் ஈடுபட்டாலும் அச்சட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றசம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக போக்சோ வழக்குகளை விசாரிக்க போக்சோ நீதிமன்றம் அமைக்கப்பட்டது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இந்த போக்சோ நீதிமன்றம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதற்கென நீதிபதிகள், அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். என்னதான் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும் அதிகரித்துதான் வருகிறது. இதற்கு முக்கிய காரணம், பெற்றோர்களின் கண்காணிப்பு குறைவாக இருப்பதே. கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனால் எட்டாக்கனியாக இருந்த செல்போன் ஏழை மற்றும் நடுத்தர வீடுகளிலும் புகுந்தது.
குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கடன் வாங்கி கூட பெற்றோர்கள் ஸ்மார்ட் போனை வாங்கிக் கொடுத்தனர். தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையிலும் செல்போனை குழந்தைகள் விடுவதாக இல்லை. இதன்காரணமாகவும் தேவையில்லாத அழைப்புகளினால் குழந்தைகளின் வாழ்க்கை திசை மாறுதவற்கு பெரும் காரணமாக அமைகிறது. சிறு வயதிலேயே ஏற்படும் ஈர்ப்பின் காரணமாக குழந்தைகள் தவறான பாதைக்கு செல்கிறார்கள். இதனால் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம் மாநகரம், சேலம் மாவட்டம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை எடுத்துக்கொண்டால் கடந்த ஆண்டு மட்டும் 641 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டோரில் 95 சதவீதம் பேர் பள்ளி, கல்லூரி மாணவிகளாக உள்ளனர். இதற்கிடையில் 18 வயதை தாண்டாத நிலையில் பெற்றோர், குழந்தைகளுக்கு திருமணமும் செய்து வைக்கின்றனர். காதும் காதும் வைத்தாற்போல் நடக்கும் இதுபோன்ற குழந்தை திருமணங்கள், பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வரும்போது தான் அம்பலமாகிறது. அதன்பிறகு மாப்பிள்ளை மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருக்கும் பெற்றோர், உறவினர்கள் மீது போக்சோ வழக்கு பாய்கிறது.
இந்தவகையில் சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம் மாட்டத்தில் 173 வழக்குகளும், நாமக்கல் மாவட்டத்தில் 107 வழக்குகளும், தர்மபுரி மாவட்டத்தில் 118 வழக்குகளும், கிருஷ்ணகிரியில் 96 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர சேலம் மாநகரில் மட்டும் 77 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் கடந்த 2 மாதத்தில் மட்டும் தர்மபுரியில் 24 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது. பின்தங்கிய மாவட்டமான தர்மபுரியில் கிராமப்புற பெண் குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசும், ேபாலீசாரும், தன்னார்வ அமைப்புகளும் எத்தனை அறிவுரைகள் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பெற்றோரின் பொறுப்புணர்வு மட்டுமே இது போன்ற அவலங்களுக்கு நிரந்தரதீர்வு தரும் என்கின்றனர் போலீசார்.
இதுகுறித்து சேலம் மாநகர துணை கமிஷனர் லாவண்யா கூறுகையில், ‘‘பள்ளி, கல்லூரிகளில் தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். முதலில் படிப்பில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் எங்களது முக்கிய வேண்டுகோளாக இருக்கிறது. மாணவிகளுக்கு எந்தவிதமான பிரச்னை என்றாலும் போலீசாரிடம் தெரிவிக்குமாறு கூறி வருகிறோம். அதே போல பெற்றோரும் தங்களது குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும். அவர்களின் எதிர்காலம் பெற்றோரிடம் தான் இருக்கிறது. பெண்குழந்தைகளுக்கு நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் பேச வேண்டும்.
குழந்தைகள் திடீரென அமைதியாக இருப்பது, வழக்கத்தை விட விலகிச் செல்வது போன்ற மாற்றங்கள் தெரிந்தால் ஏதோ பிரச்னையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இதை உணர்ந்து அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும். மாநகர ேபாலீசாரின் நடவடிக்கையின் காரணமாக போக்சோ வழக்குகள் குறைந்துள்ளது. அதேநேரத்தில் அரசும், போலீசாரும், தன்னார்வ அமைப்புகளும் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பெற்றோர் பொறுப்புடன் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். இதுவே போக்சோ வழக்குகள் குறைவதற்கு நிரந்த தீர்வாக அமையும்,’’ என்றார்.
கிராமங்களில் விழிப்புணர்வு எஸ்பி சிவக்குமார்
சேலம் எஸ்பி சிவக்குமார் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் கடந்தாண்டு (2022) 173 போக்சோ வழக்குகள் பதியப்பட்டது. இதில், தொடர்புடைய 191 குற்றவாளிகளில் 171 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நடப்பாண்டு இரண்டரை மாதத்தில் பதிவான 17 போக்சோ வழக்கில், 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிராமங்களில் பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பயிற்சி பெற்ற பெண் போலீசாரை கொண்டு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதில்,‘குட் டச், பேட் டச்’ பற்றி குழந்தைகளிடம் எடுத்துரைக்கவும், பெற்றோர் தவிர மற்றவர்களிடம் குழந்தைகள் எவ்வாறு பழக வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதேபோல், எங்கேனும் குற்றங்கள் நடந்தால், உடனே ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. போக்சோ குற்றம், வழக்கு தொடர்பாக பள்ளி, கல்லூரிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். காதல் விவகாரங்களில் சிக்கி போக்சோ வழக்கிற்குள் வரும் சம்பவங்களும் நடக்கிறது. அதனால், இளம் வயது பெண்களிடம், அது தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் விதமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,’’ என்றார்.
பஸ் நிலையங்களில் போலீஸ் கண்காணிப்பு
பள்ளி, கல்லூரி வகுப்புகள் விட்டதும் மாணவிகள் பஸ் நிறுத்தம் வருகின்றனர். அப்போது அங்கு வரும் வாலிபர்கள் சிலர், மாணவிகளுக்கு காதல் வலை வீசி தூண்டில் ேபாடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் மாணவிகள் அதிகம் கூடும் பஸ் நிறுத்தங்களில் போலீசார் ரோந்து செல்லவேண்டும். இதற்கென வருவோரை விரட்டி விட நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ்சில் செல்லும்போதும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் குழந்தைகளுக்கு தொந்தரவு கொடுக்கும் சம்பவங்களும் அதிகமாக நடக்கிறது. அதனையும் போலீசார் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
வியாழன்தோறும் விழிப்புணர்வு…
சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி கூறுகையில், ‘‘பெண் குழந்தைகளுக்கு உடலில் எங்கு தொடக்கூடாது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதே போல ஆண் குழந்தைகளுக்கும் சொல்லி வளர்க்க வேண்டும். அடிப்படையில் அவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தால்தான் நல்ல குழந்தையாக வளர்வார்கள். ஒழுக்கம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒன்று தான். அதே நேரத்தில் உறவினர்களை நம்பவே கூடாது. அவர்களால்தான் குழந்தைகள் அடிப்படையில் பாதிக்கப்படுகிறார்கள். சேலம் சரகத்தை பொறுத்தவரை பள்ளி மாணவிகளிடையே ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்,’’ என்றார்.