கரூர்: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் இஎஸ்ஐ மருந்தகத்தில் முறையான சிகிச்சை வழங்கப்படாததை கண்டித்து தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் 3,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வேலாயுதம் பாளையத்தில் உள்ள இஎஸ்ஐ மருந்தகத்தில் மருத்துவ சேவைகளை பெற்று வருகின்றனர்.
இங்கு முறையான சிகிச்சை வழங்கப் படுவதில்லை எனக்கூறி 100க்கும் மேற்பட்ட பெண் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (மார்ச் 16ம் தேதி) இஎஸ்ஐ மருந்தக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் போராட்டம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.