கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை டீசல் ஊற்றி எரித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் கீழமூட்டம் பகுதியை சேர்ந்தவர் எவரெஸ்ட் (23). இவர் அழிக்கால் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால் சிறுமி எவரெஸ்ட் உடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த எவரெஸ்ட் கடந்த 2013ஆம் ஆண்டு சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து, சிறுமியின் உடலில் டீசலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து சிறுமியை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் எவரெஸ்ட்டை கைது செய்தனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை டீசல் ஊற்றி எரித்த எவரெஸ்ட்க்கு ஆயுள் தண்டனையும், அத்துமீறி வீட்டிற்குள் புகுந்ததற்கு பத்து வருடம் சிறை தண்டனையும் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.