இந்தியா – சீனா எல்லை பகுதியில் சிக்கிம் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதி நாதுலா. இங்கு முழுவதும் பனி படர்ந்து காணப்படும். மிக முக்கிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வத்துடன் வந்து இயற்கை அழகை ரசித்து செல்வர். இந்நிலையில் நாதுலா எல்லை பகுதியில் இன்று பிற்பகல் திடீரென மிகப்பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவலறிந்து உடனடியாக மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் தலைநகர் கேங்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் பனிச்சரிவில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் ஆய்வு செய்த பின்னர் போலீசார் கூறுகையில், பனிச்சரிவில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியிருப்பதாக தெரிகிறது. இதுவரை 30 பேரை பத்திரமாக மீட்டுள்ளோம். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளோம் எனத் தெரிவித்தனர்.