சென்னை : நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது விடுதலை படம்.
இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின்மூலம் நாயகனாக ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளார் சூரி.
இதேபோல இந்தப் படத்தில் சேத்தனின் நடிப்பும் மிகுந்த பாராட்டுக்களை பெற்றுள்ளது. அவரை அனைத்து தரப்பு மக்களும் அதிகமாக திட்டி வருதே அந்த கேரக்டரின் பலமாக பார்க்கப்படுகிறது.
விடுதலை படம்
நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது விடுதலை. இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. படத்தில் ஒவ்வொரு கேரக்டருக்கும் சமமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஸ்கோர் செய்துள்ளனர்.

கேரக்டரை கண்முன்னே நிறுத்திய வெற்றிமாறன்
வெற்றிமாறன் எப்போதுமே தான் எடுத்துக் கொள்ளும் படத்தை ரசிகர்களின் உணர்வுகளுக்கு நெருக்கமாக கொண்டு செல்பவர். அவருடைய படங்களில் நடிகர்களை பார்க்க முடியாது, மாறாக அந்தக் கேரக்டர்களை நம் கண்முன்னே நிறுத்துவார். அந்தவகையில் விடுதலை படத்தில் சூரி என்ற காமெடி நடிகரின், சிறப்பான நடிப்பை வெளிக்கொண்டுவந்து அவரை அடுத்த தளத்தில் பயணிக்க செய்துள்ளார். குமரேசன் என்ற போலீஸ் டிரைவராக இந்தப் படத்தில் நடித்துள்ள சூரி, நம் கண்முன்னே தெரியவில்லை. மாறாக அந்த கேரக்டரே நம் முன்னால் நிற்கிறது.

திட்டுகளை குவித்த சேத்தன்
இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ என முக்கியமான கேரக்டர்களின் சிறப்பான நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், படத்தில் சேத்தனின் நடிப்பும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இவ்வளவு கொடூரமான இந்தக் கேரக்டர் மிகவும் அதிகமான திட்டுகளை வாங்கி வருகிறது. இது இந்த கேரக்டருக்கும் அந்த கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்திய சேத்தனுக்கும் அவரிடம் அழகாக வேலை வாங்கிய வெற்றி மாறனுக்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

சேத்தனை அடித்த தேவதர்ஷினி
இந்நிலையில் இந்தக் கேரக்டர் குறித்து பேசியுள்ள சேத்தனின் மனைவி தேவதர்ஷினி, இந்தப் படத்தை பார்த்தபோது, இவர்தான் இந்தக் கேரக்டரில் நடித்துள்ளாரா என்று அவ்வப்போது திரும்பித் திரும்பி பார்த்ததாக தெரிவித்துள்ளார். மேலும் படத்தின்போது தானும் தன்னுடைய மகளும் சேர்ந்துக் கொண்டு, ஏன் இப்படி செய்தீர்கள் என்று கூறி சேத்தனை அடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தை பார்த்துவிட்டு பலரும் சேத்தனை திட்டுவதாகவும் அதுதான் அந்த கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பாக தான் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிட்லர் என கமெண்ட்
அந்த மீசை, மற்றும் தோரணையை பார்த்துவிட்டு சேத்தன் ஹிட்லர் போலவே இருப்பதாகவும் தேவதர்ஷினி கமெண்ட் செய்துள்ளார். காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தேவதர்ஷினி, காமெடி நடிகையாக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். கேரக்டர் ரோல்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் கொடூரமான வில்லனாக மாறுபட்டு சேத்தன் நடித்துள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இதையடுத்து அந்தப் பேட்டியில் பேசிய சேத்தன், தன்னுடைய வீட்டில், இது அப்படியே மாறுபட்டு இருக்கும் என்று தன்னுடைய நகைச்சுவையை வெளிப்படுத்தினார்.