லண்டன் :இந்தியர் மற்றும் ஹிந்து என்ற காரணத்தினால், லண்டன் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக இந்தியாவை சேர்ந்த மாணவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஹரியானாவை சேர்ந்த மாணவர் கரண் கட்டாரியா, 22. இவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள, ‘லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்’ கல்லுாரியில் முதுநிலை சட்டப்படிப்பு படித்து வருகிறார்.
குடும்பத்தின் முதல் பட்டதாரியான கரண் கட்டாரியா, நடுத்தர வர்க்கத்தைத் சேர்ந்தவர்.
இவர், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்சில் சட்டம் பயில கடந்த ஆண்டு சேர்தந்போதே மாணவர் குழுவின் கல்வி பிரதிநிதியாகவும், பிரிட்டன் தேசிய மாணவர் சங்க பிரதிநிதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்சின் மாணவர் சங்க தேர்தலில், பொது செயலர் பதவிக்கு போட்டியிட, கரண் கட்டாரியா விண்ணப்பித்தார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு மனு நிராகரிக்கப்பட்டது.
இது குறித்து கரண் கட்டாரியா கூறியதாவது:
சக மாணவர்கள் அளித்த ஊக்கத்தின் அடிப்படையில் தான் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தேன்.
ஆனால், நான் போட்டியிடுவது சில தனிப்பட்ட நபர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என் நடத்தை குறித்து கொச்சையான, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி தகுதி நீக்கம் செய்து விட்டனர்.
இந்தியனாகவும், ஹிந்துவாகவும் இருப்பதே, தேர்தலில் போட்டியிட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.