ஹெல்சின்கி, ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் ராணுவ அமைப்பில், 31-வது உறுப்பினராக பின்லாந்து இணைந்ததை அடுத்து ரஷ்யாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த ராணுவ அமைப்பான நேட்டோவை அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட 12 நாடுகள் சேர்ந்து உருவாக்கின.
இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீதும் ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர்ந்து இயங்க வேண்டும் என்பது விதியாகும்.
நேட்டோ கூட்டமைப்பில் பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உட்பட 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான இதில், அசுர பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இந்த அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ஓராண்டுக்கு மேலாக ரஷ்யா போர் புரிந்து வருகிறது.
இது பிற ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்துள்ள பின்லாந்து, நேட்டோ கூட்டமைப்பின் 31வது உறுப்பினராக நேற்று அதிகாரப்பூர்வமாக இணைந்தது.
இதையடுத்து, பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ தலைமை அலுவலக கட்டடத்தில் பின்லாந்து நாட்டு கொடி ஏற்றப்பட்டது.
இதேபோல், பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் உள்ள பாரம்பரிய ராணுவக் கட்டடத்தில் நேட்டோ கொடி பறக்கவிடப்பட்டது.
முன்னதாக, பின்லாந்து நேட்டோவில் இணைவதை விரும்பாத ரஷ்யா, அந்நாட்டுக்கு பல கட்டங்களாக மறைமுக எச்சரிக்கை விடுத்தது.
ராணுவ அமைப்பில் இணைவதால், பின்லாந்தில் நேட்டோ படைகள் குவிக்கப்பட்டு, உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பின்னடைவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் இந்த எச்சரிக்கை விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனவே, பின்லாந்து நேட்டோவில் இணைந்தது ரஷ்யாவுக்கு நெருக்கடியை அதிகரித்து உள்ளது.
இதற்கிடையே, பின்லாந்து நாட்டின் பார்லி., இணையதளம் ‘ஹேக்கர்’கள் எனப்படும் சட்டவிரோத ஊடுருவல்காரர்களால் முடக்கப்பட்டுள்ளது.
இதற்கு பொறுப்பு ஏற்றுள்ள ரஷ்யா சார்பு ஹேக்கர் குழு, ‘இது, பின்லாந்து நேட்டோவில் இணைந்ததற்கான பதிலடி’ என தெரிவித்து உள்ளது.
வலதுசாரி அணி வெற்றி
பின்லாந்தில் சமீபத்தில் நடந்த பிரதமர் தேர்தலில், ஆளும் கட்சி தோல்வியடைந்த நிலையில், வலதுசாரி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் பதிவான ஓட்டுகளில் 20.7 சதவீத ஓட்டுகளை பெற்ற மத்திய- வலதுசாரி கூட்டணி முதலிடத்தையும், ‘தி பின்ஸ்’ கட்சி 20.1 சதவீத ஓட்டுகளுடன் இரண்டாவது இடத்தையும் பெற்றன.ஆளும் கட்சியான சோஷிலிஸ்ட் ஜனநாயக கட்சி 19.9 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. பிரதமராக இருந்த சன்னா மரின், 34, மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளே, ஆளும் கட்சியின் பின்னடைவுக்கு காரணம் என கூறப்படுகிறது. ‘நேட்டோ’ அமைப்பில் பின்லாந்து இணைந்துள்ள சூழலில், இங்கு ஆட்சி மாற்றம் நடந்துள்ளது குறிப்பிடதக்கது.