புதுடெல்லி,
ஐபிஎல் தொடரின் நேற்று டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் வார்னர் 37 ரன், அக்சர் 36 ரன் எடுத்தனர்.
இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தமிழக வீரர் சாய் சுதர்சனின் அரைசதத்தின் (62 ரன்) உதவியுடன் 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தனது 2வது வெற்றியை பதிவு செய்தது
இந்நிலையில் சாய் சுதர்சன் இன்னும் ஓரிரு வருடங்களில் இந்திய அணிக்காக விளையாடுவதை பார்க்க முடியும் என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதற்கான பாராட்டுக்கள் அவருக்கும் பயிற்சியாளர்களுக்கும் சேரும். கடந்த 15 நாட்களில் அவர் செய்து வரும் நல்ல பேட்டிங் அனைத்தும் அவருடைய கடின உழைப்பை உங்களுக்கு காட்டுகிறது. இதே போல செயல்படும் பட்சத்தில் இன்னும் 2 வருடங்களில் அவர் தன்னுடைய ஐபிஎல் அணிக்கு இன்னும் சிறப்பாக செயல்பட்டு சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய கிரிக்கெட்டுகாக முக்கிய பங்காற்றுவார் என்று கணிக்கிறேன். என பாண்ட்யா கூறினார்.