Tamil Nadu Covid Update: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க அரசு மருத்துவமனைகள், திரையரங்கம், பஸ், வணிக வளாகம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தினமும் 10 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக தற்போது 92 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கோவை உப்பிலிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான பெண் கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி இணை நோயான, கேன்சர், கல்லீரல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது அவருக்கு அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனிடையே அந்த பெண்ணை கொரோனா வார்டுக்கு மாற்றி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றினால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீண்ட நாளாக கொரோனா தொற்றால், தமிழ்நாட்டில் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருந்து வந்தது. முன்னதாக, கொரோனா தொற்று பரவல் குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில்,”ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனாவுக்கு முன்பு இருந்து சுற்றுப்புறத்தில் இருந்து பாதுகாக்க முககவசம் அணிவார்கள்.
காவல்துறையினர் அபராதம் விதித்துதான் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இல்லை. முகக்கவசம் அவசியம் என்பதை பொது மக்கள் அறிந்து செயல்பட வேண்டும். நம்மை காத்துக்கொள்ள நல்ல வழி முக கவசம் போடுவது அதனை பின்பற்றுங்கள்.
கொரோனா தொற்று சமூக பாதிப்பாக மாறவில்லை தனிமனித பாதிப்பு தான் இப்போது உள்ளது. குடும்பம் முழுக்க பாதிக்கப்படுவது என்று இல்லை. தொற்று பாதிக்கப்படுபவர்களும் தீவிர சிகிச்சைக்கு அனுப்பப்பட வேண்டிய சூழல் எதுவும் ஏற்படவில்லை, அதனால் பயம் கொள்ள தேவையில்லை. வரும் 10 மற்றும் 11 தேதிகளில் ஒன்றிய அரசு சார்பில் மருத்துவ கட்டமைப்பு தயாராக இருக்கிறதா என்று ஒரு திட்டத்தை தொடங்க சொல்லி இருக்கிறார்கள். அன்றைய தினம் ஏதாவது ஒரு மருத்துவமனையில் ஆய்வினை மேற்கொள்ள உள்ளோம்” என்றார்.