Balagam Tamil Review: பாலகம் படத்தின் தமிழ் விமர்சனம்… தெலுங்குல இப்படி ஒரு சினிமாவா..?

Rating:
3.5/5

சென்னை: தெலுங்கில் வேணு யெல்தண்டி இயக்கியுள்ள பாலகம் திரைப்படம் கடந்த மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அதனைத் தொடர்ந்து தற்போது அமசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை ஓடிடி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிரியதர்ஷி, காவ்யா கல்யாண்ராம், சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ளது.

திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

பாலகம் தமிழ் விமர்சனம்

தெலங்கானாவில் உள்ள கொஞ்சம் ஏழ்மையான கிராமத்தில் தனது மகன், பேரன் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார் கொமுரய்யா. வெளித்தோற்றத்தில் பார்க்க மிகவும் குறும்புத்தனத்துடன் வலம் வரும் அவர், மிகப் பெரிய ஏக்கத்துடன் உயிரிழந்துவிடுகிறார். அவரது இறுதிச் சடங்கிற்காக வெளியூரில் இருந்து இளைய மகனும், மகளும் அவர்களது குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்புகின்றனர். கொமுரய்யாவின் சடலம் தகனம் செய்யப்பட்ட பின்னர், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எல்லாவிதமான சடங்கு சம்பிரதாயங்களையும் குடும்பத்தினர் செய்கின்றனர்.

காகம் கற்பித்த பாடம்

ஆனால், காரியம் எல்லாம் செய்த பின்னர் கொமுரய்யாவுக்காக படைக்கப்பட்ட படையலை உண்ண மறுக்கிறது காகம். தனித் தனியாக நிற்கும் இலைகள் இல்லாத இரண்டு மரக்கிளைகளில் இங்கும் அங்குமாக அமர்ந்துவிட்டு அப்படியே பறந்துவிடுகிறது அந்த காகம். ஒவ்வொரு முறையும் இதுவே வாடிக்கையாக இதற்கான காரணம் தெரியாமல் அந்த கிராமமே திகைத்து நிற்கிறது. இறுதியாக என்ன காரணம் என கண்டுபிடித்தார்களா, உயிரிழந்த கொமுரய்யாவின் ஆன்மா சாந்தியடைந்ததா என்பது தான் படத்தின் மொத்த கதையும்.

 Balagam film Tamil Review: Balagam Tamil review released on Amazon Prime OTT

சினிமா அல்ல காவியம்

முதல் காட்சியில் கொமுரய்யாவின் கேரக்டரை மட்டும் அறிமுகப்படுத்திவிட்டு அவரை உயிரிழக்கச் செய்கிறது திரைக்கதை. உருவமாக மட்டுமே திரைக்கதையில் இருந்து மறையும் கொமுரய்யா, அவரது ஆன்மாவில் இருந்து இந்தப் படத்தின் அடிநாதம் எதுவென்பதை விவரிக்கிறார். அது திரைக்கதையாக மட்டும் இல்லாமல், குடும்ப உறவுகளில் காணப்படும் சிக்கல்கள், வீணான பிடிவாதங்கள் ஆகியவற்றை உணர்ச்சி மிகு காட்சிகளால் வலியோடு கடத்துகிறது பாலகம். சில முரண்கள், ஈகோ, புரிதலற்ற இகழ்வான மனித மதிப்பீடுகள் எப்படி ஒரு குடும்ப உறவை சிதைக்கிறது என்பதே பாலகம் படத்தின் மையக்கரு. இறுதியில் அதற்கான தீர்வை ரொம்பவே எமோஷனலாக காட்சிப்படுத்தி நிறைவு செய்கிறார் இயக்குநர் வேணு யெல்தண்டி.

 Balagam film Tamil Review: Balagam Tamil review released on Amazon Prime OTT

கேரக்டர்களின் தேர்வு

தாத்தாவின் மறைவால் தனது திருமணமே தடைபட்டு விட்டதே என புலம்பும் பேரன், அப்பாவின் மறைவுக்கு வந்த தங்கையிடம் பேச விருப்பம் இல்லாமல் ஈகோவில் முரண்டு பிடித்து நிற்கும் அண்ணன், பக்கத்து ஊரில் இருந்தும் அப்பாவை பார்த்துக்கொள்ள முடியாமல் ஏக்கத்தில் தவிக்கும் கொமுரய்யாவின் மகள், மனைவியின் அதிகாரத்தால் அவமானப்பட்டுக் கொண்டே இருக்கும் கொமுரய்யாவின் இளைய மகன், தனது தன்மானத்தை இழந்துவிடக் கூடாது என பிடிவாதத்துடன் வலம் வரும் கொமுரய்யாவின் மருமகன், இன்னும் ஏராளமான துணை பாத்திரங்களுடன் ஒரு உணர்ச்சிக் குவியலான கதையை கட்டமைத்துள்ளது பாலகம் திரைப்படம். கொமுரய்யாவாக சுதாகர் ரெட்டி, சைலுவாக பிரியதர்ஷி, சந்தியாவாக காவ்யா கல்யாண்ராம், சைலுவின் அப்பா கேரக்டரில் ஜெயராம், நாராயணா பாத்திரத்தில் முரளிதர், லக்‌ஷிமியாக ரூபா லக்‌ஷ்மி என ஒவ்வொரு கேரக்டரும் கதைக்கு தேவையான அளவில் சிறப்பாக நடித்துள்ளனர்.

நுட்பமான எளிய திரைமொழி

பிரம்மாண்டமான பட்ஜெட், பேண்டசியான மேக்கிங் என உணர்ச்சிகளற்ற வெற்று திரைக்கதைகளுடன் தான் உருவாகும் குடும்ப உறவுகளை பேசும் படங்களுக்கு மத்தியில் எல்லாவிதத்திலும் தனித்து நிற்கிறது பாலகம். அச்சு அசலான கிராமம், வெள்ளந்தியான மனிதர்கள், உணர்வு ரீதியான காட்சியமைப்புகள், யதார்த்தமான வசனங்கள் என மனதில் அப்படியே ஒன்றிவிடுகிறது இந்தப் படம். முக்கியமாக படத்தின் இறுதிக் காட்சியில் வரும் பாடல் ஒன்றே போதும் கல்நெஞ்சம் கொண்டோரையும் கலங்கடித்துவிடும். இயல்பான எளிமையான மக்களின் வாழ்வியலை பின்னணியாக வைத்து இப்படி ஒரு படம் எடுப்பது அவ்வளவு எளிதானது கிடையாது. ஆனால், அதனை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார் இயக்குநர் வேணுவும் அவரது குழுவினரும். ஓடிடி ரசிகர்கள் குடும்பத்துடனும் முக்கியமாக குழந்தைகளுடனும் பார்த்து ரசிக்க வேண்டிய படம். அமேசான் ப்ரைம் தளத்தில் காணக்கிடைக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.