நடிகராக அறிமுகமான பாடலாசிரியர்

திரைப்படத்துறையில் கால்பதிக்கிற எல்லோருக்கும் நடிக்கும் ஆசை இருக்கும் என்பார்கள். அரிதாக ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் நடிகராகி இருக்கிறார்கள். குறிப்பாக சமீபகாலமாக பாடலாசிரியர்கள் நடிகராக ஆர்வம் காட்டுகிறார்கள். பா.விஜய், சினேகன் நடிகராகிவிட்ட நிலையில் தற்போது பாடலாசிரியர் ப்ரியனும் நடிகர் மற்றும் இயக்குனராகி இருக்கிறார்.

மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா, வேலா வேலா வேலாயுதம், உசுமுலாரசே உசுமுலாரசே, செக்ஸி லேடி கிட்ட வாடி, மனசுக்குள் புது மழை விழுகிறதே உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய ப்ரியன் 'அரணம்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷா நடிக்கிறார். ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை, சத்ரு போன்ற திரைப்படங்களின் கதைநாயகன் லகுபரன் மற்றும் கீர்த்தனா ஆகியோரும் நடிக்கிறார்கள். நித்தின் கே.ராஜ் மற்றும் நவுசத் ஒளிப்பதிவு செய்கிறார்கள், சாஜன் மாதவ் இசை அமைக்கிறார்.

நடிப்பது குறித்து பிரியன் கூறும்போது “வாழ்க்கையின் அதிசயமே அடுத்த நிமிடம் நடக்கும் நாம் எதிர்பாரா ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்தான். அப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள் அதை எதிர்கொள்கையில் அவன் காணும் பெரும் நிகழ்வுகள் என யூகிக்கவே இயலாத வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதை இது.

ஒரு பெரிய ஜமீன் வீட்டில் வாழ்ந்து வந்த ஜமீன்தாரின் ஊதாரி மகன் திடீரென இறந்துவிட.. அவன் பேயாக இருப்பதாக நம்பப்படும் நிலையில் அந்த ஜமீன்தாரும் அதே வீட்டில் இறந்துவிட.. அவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட கதிர் தன் புதுமனைவியுடன் அந்த ஜமீன் வீட்டுக்குக் குடியேறுகிறான். மகிழ்ச்சியாய் அவர்கள் வாழத்துவங்குகையில் பங்களாவை சுற்றிலும் சில அமானுஷ்யங்கள் நடக்கிறன.

அவை என்ன? எதிர்பாரா மர்மங்கள் நிறைந்த அவற்றை கதிர் தன் தம்பியின் துணையோடு எப்படிக் கண்டுபிடித்துத் தன் குடும்பத்தைக் காக்கிறான் என்பதை ஹாரர், கிரைம், திரில்லர் வடிவில் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திரைப்படப் பாடலாசிரியராக இதுவரை 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறேன். இப்போது ஒரு நடிகனாக, இயக்குநராக வந்திருக்கிறேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.