நாடு முழுவதும் சமீப காலமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றன. அந்த வகையில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோன பாதிப்பு கடந்த சில நாட்களாக இரட்டை இலக்கமாக அதிகரித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை கடைபிடித்தல் அவசியம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.
இதனிடையே சமீபத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி மத்திய அரசு அவசர கடிதம் எழுதியிருந்தது.
அந்த வகையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தற்போது வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று நாளில் தமிழகத்தில் 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார்.
அந்த வகையில் கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த பெண் (வயது 55) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சமீபகாலமாக கொரோனா தொற்று அதிகரித்தாலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஆனால் தற்போது அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.