சென்னை : உலக பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் வகையில், உலக பாரம்பரிய தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் ஏற்படும் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களால், பாரம்பரிய சொத்துக்கள் குறித்த அறிவு, இளைஞர்களிடம் குறைந்து வருகிறது.
இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அவற்றை பாதுகாக்கும் வகையிலும், ஆண்டுதோறும் ஏப்ரல், 18ம் தேதியை உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்க, ‘யுனெஸ்கோ’ அறிவித்துள்ளது.இதுகுறித்து, தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் அதிகாரி, ஸ்ரீதரன் கூறியதாவது:
நம் முன்னோர் விட்டுச் சென்ற பொருட்களும், இடங்களும் தான், நம் பாரம்பரியச் சொத்துக்கள். அதில், கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள், இஸ்லாமிய, கிறிஸ்த்துவ வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை வருகின்றன. இவற்றை மத்திய, மாநில தொல்லியல் துறையினர் பாதுகாக்கின்றனர்.
செப்பேடு
மாமல்லபுரம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், மதுரை, திருவரங்கம் உள்ளிட்ட கோவில்களை கண்டு வெளிநாட்டவர் வியக்கின்றனர். அவற்றின் கலையழகு, சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவை பாரம்பரிய சொத்துக்களாக உள்ளன.
அங்குள்ள கல்வெட்டுகள், பண்டைய காலத்தின் கிராம நிர்வாகம், நீதி, தேர்தல், வேளாண்மை, நீர்ப்பாசனம், நில அமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கூறுகின்றன. செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காசுகள் உள்ளிட்டவையும், பாரம்பரிய வரலாற்றை சொல்கின்றன.
அருங்காட்சியகம்
தற்போது, கீழடி, ஆதிச்சநல்லுார் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வுகளில் கிடைக்கும் பொருட்களும், நம் பாரம்பரிய பெருமைகளை எடுத்துச் சொல்கின்றன.
அங்கு, அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றின் வாயிலாக நம் பாரம்பரிய பெருமைகளை அறியலாம்.
நாளை அனைவரும், அருகில் உள்ள அருங்காட்சியகங்களுக்கு சென்று, அவை பற்றி குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். கோவில், அரண்மனை, சிலைகளின் மீது கிறுக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.