ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இரண்டு நாள் பயணமாக வந்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, இன்று காலை ராமநாதபுரம் விருந்தினர் மாளிகையில் வைத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர், “மாணவர்கள் அதிகாலையில் எழ வேண்டும். தங்களது மனதை ஒருமுகப்படுத்த தினமும் யோகாசனம், உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். மொபைல் போனிலே மூழ்கி இருக்கக் கூடாது. தூக்கத்தை குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டாம். அதேபோல் நம் நாட்டில் விளையாட்டில் சாதித்தால் வாழ்வில் ஒளிரலாம். அதே நேரத்தில் மாணவர்கள் போதுமான அளவு தூங்க வேண்டும். இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது வரும் இடர்பாடுகளை பொருட்படுத்தாமல் போராடினால் நிச்சயம் வெற்றிபெறலாம்” என அறிவுரை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து மாணவர்களிடம் `யாரெல்லாம் என்னவாக விரும்புகிறீர்கள்?’ என்று கேள்வி கேட்டார். அதற்கு மாணவ மாணவிகள் மருத்துவர், இன்ஜினீயர், கிரிமினல் லாயர், மரைன் இன்ஜினீயர் என்று சொல்லிக் கொண்டே வந்தனர். அப்போது ஒரு மாணவி, `நான் உங்களைப் போலவே ஆக வேண்டும்’ என சிரித்தபடி கூறினார். அதற்கு, `காலை எத்தனை மணிக்கு எழுந்து கொள்வீர்கள்?’ என ஆளுநர் பதில் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த மாணவி, `இரவு எட்டு மணிக்கு படுத்துவிட்டு காலை 7 மணிக்கு எழுவேன்’ எனத் தெரிவித்தார். அதையடுத்து `வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் அதிகாலையே எழ வேண்டும், தூக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.

நம் லட்சியத்தை நோக்கிப் பயணிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நாம் குறித்து வைத்துக் கொள்ளவேண்டும்’ என மாணவிக்கு அறிவுரை கூறினார். அப்போது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரை, அப்துல் கலாம் ஆசாத் என தவறாகக் கூறியதை அவரின் உதவியாளர்கள் கவனித்து அதை அவரிடம் கூறியதையடுத்து… சுதாரித்து டாக்டர் அப்துல் கலாம் என திருத்தி குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய ஆளுநர், “அவர் உழைப்பால் உயர்ந்து நாட்டின் குடியரசுத் தலைவரானதைப்போல், மாணவர்களும் உழைத்து கொண்டே இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
உங்களுக்கு இந்த வேலை சலிப்பு தட்டுகிறதா என்ற மற்றொரு மாணவியின் கேள்விக்கு, “நாம் செய்யும் வேலைகளில் ஈர்ப்பு இருக்க வேண்டும். எனக்கு இந்தப் பணியில் ஈர்ப்பு இருக்கிறது. எப்போது அந்த ஈர்ப்பு குறைந்து சலிப்பு தட்டுகிறதோ, அப்போது இந்தப் பதவியிலிருந்து விலகிவிடுவேன். அதுவரை என்னுடைய பணியை சீரும் சிறப்புமாகச் செழுமையாகச் செய்வேன்” எனக் கூறினார்.

முன்னதாக ஆளுநரை வரவேற்கும்விதமாக மாணவர்கள் பாரம்பர்ய கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அதைக் கண்டு ரசித்த ஆளுநர் மாணவர்களைப் பாராட்டினார்.
இதற்கிடையே ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.பி.எம், சி.பி.ஐ, ம.தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.