அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

சுற்றுலா அயர்லாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் 16 ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 591 ஓட்டங்களை பெற்ற நிலையில் இன்னிங்ஸை இடை நிறுத்திக் கொண்டது.

இதில் இலங்கை அணி சார்பில் 4 வீரர்கள் சதம் பெற்றிருந்தனர். அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 179 (235) ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 140 (193) ஓட்டங்களை பெற்றதோடு, ஆட்டமிழக்காது சதீர சமரவிக்ரம 104 (114) ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 102 (155) ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து Follow On முறையில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி நேற்று (18) சகல விக்கெட்டுகளையும் இழந்து 168 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் ரமேஸ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதற்கமைய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக பெற்ற 591 ஓட்டங்களை கடக்க முடியாத அயர்லாந்து அணி தோல்வியைத் தழுவிய நிலையில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பிரபாத் ஜயசூரிய தெரிவானார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இத்தொடரின் 2ஆவது போட்டி எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.