சென்னை: தமிழ்த் திரையுலகின் பன்முகக் கலைஞராக வலம் வந்தவர் கிரேஸி மோகன்.
நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான கிரேஸி மோகன், கடந்த 2019ம் ஆண்டு காலமானார்.
இந்நிலையில், கிரேஸி மோகனின் மனைவி நளினி நேற்று காலமானார்.
அவரது மறைவுக்கு நடிகர்கள் கமல், ஸ்ரீமன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து மிக உருக்கமாக டிவீட் செய்துள்ளனர்.
நளினி கிரேஸி மோகன் மறைவு
மேடை நாடகங்கள் மூலம் பிரபலமானவர் கிரேஸி மோகன். நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், எழுத்தாளர், சினிமா வசனகர்த்தா, காமெடி நடிகர் என பன்முக கலைஞராகவும் வலம் வந்தார். மிக முக்கியமாக சினிமாவில் கமலுடன் கிரேஸி மோகன் கூட்டணி அமைத்த படங்கள் காமெடியில் மாஸ் காட்டின.
அபூர்வ சகோதரர்கள் படத்தில் தொடங்கிய இந்தக் கூட்டணியின் காமெடி மேஜிக், மைக்கேல் மதன காமராஜன், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் என ஒவ்வொரு படத்திலும் காமெடியில் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்தன. இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு மாரடைப்பால் கிரேஸி மோகன் உயிரிழந்தார்.

தனது நெருங்கிய நண்பரான கிரேஸி மோகன் மறைவு நடிகர் கமல்ஹாசனை ரொம்பவே பாதித்திருந்தது. கிரேஸி மோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கு நேரில் சென்ற கமல், அவரது இறுதி நிமிடங்கள் வரை உடன் இருந்து பிரியாவிடை கொடுத்தார். அதேபோல் கிரேஸி மோகனின் இறுதி ஊர்வலத்திலும் கண்ணீர் மல்க கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், கிரேஸி மோகனின் மனைவி நளினியும் நேற்று காலமானார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கமல்ஹாசன், நளினி மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கமல் – கிரேஸி மோகன் நட்பு சினிமாவையும் கடந்து நல்ல குடும்ப உறவாகவே இருந்துள்ளது. அதனை இருவருமே பல பேட்டிகளில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கிரேஸி மோகன் மறைவுக்கு நடிகர் கமல் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், நடிகர் ஸ்ரீமனும் நளினி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கமல் – கிரேஸி கூட்டணியில் உருவான பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் ஸ்ரீமனும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.