இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 500 பஸ்களில் இயந்திரக் கோளாறுகள் காணப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் அறிவிக்கவில்லை என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
கடந்த காலப்பகுதியில்; போக்குவரத்து அமைச்சராக இருந்த திலும் அமுனுகமவின் ஆட்சிக்காலத்தில் இந்திய கடன் திட்டத்தின் கீழ் 500 பஸ்களை இலங்கைக்கு கொண்டுவரும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக, தயாரிக்கப்பட்ட பஸ்களை மீளப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்காத நிலை ஏற்பட்டதால், நான் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றதன் பின்னர், தூதரகங்களுடன் கலந்துரையாடி, நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த 500 பஸ்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.