"ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு அவசியம்".. தனித்தீர்மானம் கொண்டு வந்து ஸ்டாலின் பரபர பேச்சு..

சென்னை:
ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு சலுகைகளை வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்தியாவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உட்பட பல்வேறு சமூக பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 69 சதவீத இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இடஒதுக்கீட்டை பொறுத்தவரை, இந்து மதத்தினராக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் முழுப்பலன்களும் கிடைக்கும் வகையில் நமது சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவர்களாக மதம் மாறினால், அவர்பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் (Backward Caste) கொண்டு வரப்படுவார். இந்து மதத்தில் உள்ள ஆதி திராவிடர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் மதம் மாறியவருக்கு கிடைக்காது. இந்நிலையில், இந்த முறைக்கு முடிவுக்கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம்

கிறிஸ்தவம், முஸ்லிம் என எந்த மதத்திற்கு மாறினாலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களுக்குரிய சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் அந்த சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்கும் விதமாக, ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு சலுகைகளை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கும்..

பின்னர் அந்த தீர்மானத்தில் உள்ள அம்சங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வாசித்தார். அவை பின்வருமாறு: இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வமான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.

ஒருமனதாக நிறைவேற்றம்

ஆதி திராவிட கிறிஸ்தவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இந்திய அரசை தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என அந்த தீர்மானத்தை மு.க. ஸ்டாலின் வாசித்தார். அதன் பின்னர், இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

மதம் மாறினாலும் துரத்தும் ஜாதி இழிவு

தொடர்ந்து பேசிய அவர், “மதம் மாறிய ஒற்றைக் காரணத்துக்காக ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கு ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடு உரிமைகளை மறுப்பது சரியல்ல. மதம் மாறிய போதிலும் ஆதி திராவிடர் சமூகத்தினர் தீண்டாமை உள்ளிட்ட ஜாதி ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகியே வருகிறார்கள். எனவே, அவர்களும் சமூக நீதியை பெறும் வகையில் இந்த தீர்மானத்தின் கூறப்பட்டுள்ள அம்சங்களை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும். ஜாதி, என்றும் மாறுதலுக்கு உட்பட்டது அல்ல என்பதை இந்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்” என மு.க. ஸ்டாலின் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.