கள்ளக்குறிச்சி மாவட்டம், நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி. இவரின் கணவர் கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அதையடுத்து வளர்மதி தனது 11 வயது மகன் தமிழரசன், எட்டு மாத கைக்குழந்தை கேசவன் ஆகியோருடன் தனியாக வீட்டில் வசித்து வந்தார். கணவரை இழந்ததால் குடும்பப் பொறுப்பை ஏற்ற வளர்மதி, ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வளர்மதி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. வளர்மதியின் வீடும் திறக்கப்படாமலேயே இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அங்கு விரைந்த போலீஸார், வளர்மதியின் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு வளர்மதி, அவரின் 11 வயது மகன் தமிழரசன், எட்டு மாத கைக்குழந்தை கேசவன் ஆகியோர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்திருக்கின்றனர். தகவலறிந்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி மோகன்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில், அந்த சடலங்களை மீட்ட போலீஸார், உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்துப் பேசிய விசாரணை அதிகாரிகள், “மூவரும் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. முதல்கட்ட விசாரணையை தொடங்கியிருக்கிறோம்” என்றனர்.