சென்னை : “எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது தற்காலிக முடிவு தான். இந்த முடிவு நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இன்றைய கடிதத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்ததாக அர்த்தமில்லை” என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் வைத்திருந்தது. இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில், பொதுச் செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென வழக்குத் தொடர்ந்தார் ஈபிஎஸ்.
அந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்தக் காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வெளியிட்டுள்ளது.
எடப்பாடி உறுதி : இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் அதிமுகவினர் ஈபிஎஸ்ஸுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக என்பது ஒன்றுதான். இன்று தெளிவான தீர்ப்பு வந்துவிட்டது. இனி குழப்பம் இல்லை. நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின் வெற்றி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படும். ஒரு சிலரை தவிர மற்ற அனைவரையும் கட்சியில் சேர்த்துக்கொள்வோம். திமுகவை எதிர்க்கக்கூடிய தெம்பும், திரானியும் உள்ள ஒரே கட்சி அதிமுக தான் என்று கூறினார்.
தற்காலிக முடிவு தான் : இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், “எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது தற்காலிக முடிவு தான். இந்த முடிவு நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இன்றைய கடிதத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்ததாக அர்த்தமில்லை. ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. ஒருவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டுமென்றால் முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தரப்பட்டதோ அதேபோலத்தான் இப்போதும் தரப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளின் படியே இப்போது இதனை அறிவித்துள்ளார்கள். அவர்களாக ஆராய்ந்து எந்த முடிவையும் அறிவிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.