சவுத் பாத்ரே ஐலேண்ட் அமெரிக்காவின் டெக்சாசில் இருந்து சோதனை முயற்சியாக விண்ணில் ஏவப்பட்ட, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் சக்திவாய்ந்த, பிரமாண்ட ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் வெடித்து சிதறியது.
அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ என்ற விண்வெளி ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
விண்வெளி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு புதிய முயற்சிகளை இந்த நிறுவனம் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது. விண்வெளி ஆராய்ச்சி துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது.
இந்த நிறுவனம், ஸ்டார்ஷிப் என்ற சக்திவாய்ந்த, பிரமாண்ட ராக்கெட்டை உருவாக்கி உள்ளது. இந்த ராக்கெட் 400 அடி நீளம் உடையது. நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்து செல்ல இந்த ராக்கெட்டை பயன்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டிருந்தது.
நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் அடுத்த நிலவு பயணத்துக்கு இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டை பயன்படுத்தவும் நாசா முன்பதிவு செய்திருந்தது.
இந்நிலையில், ஸ்டார்ஷிப் ராக்கெட்டை உலகை சுற்றி வரச் செய்து சோதனையிட ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டது.
இதையடுத்து, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தென் கோடியில், மெக்சிகோ நாட்டு எல்லை அருகே உள்ள போகா சிக்கா கடற்கரை ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் நேற்று ஏவப்பட்டது.
புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த ராக்கெட் வெடித்து சிதறியது. இந்த ராக்கெட்டில், மனிதர்களோ, செயற்கைக்கோள்களோ இல்லை. கோளாறுகள் சரி செய்யப்பட்ட பின் இந்த முயற்சி மீண்டும் தொடரும் என, ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement