சென்னை : தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் கே ஜே கணேஷ் தயாரிப்பில் இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் யாத்திசை.
இப்படத்தில் குரு சோமசுந்தரம், மு.சந்திரகுமார், செம்மலர் அண்ணம், புதுமுகங்களான சக்தி, சேயோன், ராஜலட்சுமி, வைதேகி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வரலாற்று பின்னணியை கொண்ட அதிரடி சாகச படமாக உருவாகி உள்ள இப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.
யாத்திசை : பாகுபலி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியின் மூலம், வரலாற்று திரைப்படங்கள் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக செலவில் திரைப்படத்தை எடுக்க பல தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். அந்த வகையில் வெறும் ரூ.10 கோடி பட்ஜெட்டில் செலவில், பாண்டிய மன்னனான ரணதீரனுக்கும், எயினர்களுக்கும் இடையேயான போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் தான் யாத்திசை.

கொண்டாடிய ரசிகர்கள் : இயக்குனர் தரணி ராஜேந்திரன் இயக்குநராக அறிமுகமாகி உள்ள முதல் படமாகும். இப்படத்தில், ஒரு சிலரைத்தவிர பெரும்பாலான நடிகர், நடிகைகள் புதுமுகங்கள் தான். இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியான போதே இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தன. இன்று தியேட்டரில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
படக்குழுவுக்கு நன்றி : யாத்திசை படத்தை பார்த்த இணையவாசி தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தை வெகுவாக புகழ்ந்துள்ளார். யாத்திசை திரைப்படம் வரலாற்றுப் படங்களுக்கு ஒரு புதிய அளவுகோலை அமைந்துள்ளது. இப்படம் போர்களுக்குப் பின்னால் உள்ள உண்மையைச் சொல்கிறது. இதுபோன்ற ஒரு படத்தை தேவையான பட்ஜெட்டில் எடுத்ததற்காக ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

கதாபாத்திரம் உணர்ந்து : யாத்திரை சினிமாஆர்வலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இப்படத்தை தொழில்நுட்ப ரீதியாக நன்கு தயாரித்துள்ளார் இயக்குநர் தரணி ராஜேந்திரன். அவர் கதை சொல்லிய விதம் அருமையாக உள்ளது. மற்ற நடிகர்கள் புதுமுகங்களாக இருந்தாலும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
மறைக்கப்பட்ட பழங்குடி மக்கள் : 7ம் நூற்றாண்டில் தெற்கு திசையில் வாழ்ந்த பாண்டிய இளவரசர் ரணதீரன், எயினர் என்ற மறைக்கப்பட்ட பழங்குடி மக்கள், என பல விதமான கதைக்களங்களை கொண்ட ஒரே படமாக யாத்திசை திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் தரணி ராசேந்திரன். கதை ஏழாம் நூற்றாண்டு காலகட்டத்தில் கதை நடப்பதால், அக்காலத்தில் புழங்கிய தமிழ்ச் சொற்களையே இப்படத்தில் பயன்படுத்தி உள்ளது பாராட்டுக்குரியது.