திருச்சி மாவட்டத்தில் சக போலீஸ்காரர் காதலித்து கைவிட்டதால் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் உறையூர் மேல பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் இவரது மகள் கவிப்பிரியா. 27 வயதான இவர் நாகை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் எழுத்தாளராக பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த கவிப்பிரியா மதிய உணவு சாப்பிடுவதற்காக தங்கியிருந்த காவலர் குடியிருப்புக்கு சென்றிருக்கிறார்.
மதிய உணவிற்காக சென்றவர் நீண்ட நேரமாகியும் பணிக்கு திரும்பாததால் சந்தேகமடைந்த உடன் பணியாற்றுபவர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்ளனர். அவர் போன் எடுக்காததால் காவலர் குடியிருப்புக்கு வந்து அவரது அறையை சோதித்த போது அறையில் துப்பட்டவால் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கவிப்பிரியா 2020 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார் என்று தெரிய வந்திருக்கிறது. கவிப்பிரியா அவருடன் பணியாற்றிய கடலூரைச் சார்ந்த காவலர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்தக் காவலர் 2016 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். மேலும் அவர் மயிலாடுதுறைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டதிலிருந்து கவிப்பிரியாவின் செல்போன் அழைப்புகளையும் ஏற்பதில்லை என தெரிகிறது. இதன் காரணமாக அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற ரீதியிலும் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.