சென்னை: Kalaipuli S Thanu (கலைப்புலி எஸ். தாணு) தயாரிப்பாளர் தாணுவிடம் ஒரு கதையை சொல்லிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் வேறு ஒரு கதையை கமல் ஹாசன் எடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தத் தகவலை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
இந்திய சினிமாவில் நடிப்பின் உச்சம் என புகழப்படுபவர் சிவாஜி கணேசன். அவருக்கு அடுத்ததாக அந்த இடத்தை நெருங்கியவர் கமல் ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார். சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள் வரை அவர் மீது மிகுந்த மரியாதையை வைத்து அவரது நடிப்புக்கு தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர்.
புதுமை கமல் ஹாசன்: கமல் ஹாசன் என்றாலே உழைப்பு, வித்தியாசம், புதுமை என்று பெயர் எடுத்தவர். அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையையோ, வித்தியாசத்தையோ இடம்பெற செய்துவிடுவார். அதனால்தான் எத்தனை இயக்குநர்கள் வந்தாலும் நாங்கள் இப்போது செய்வதை கமல் சார் அப்போதே செய்துவிட்டார் என்று ஏகத்துக்கும் புகழ்வார்கள். அவர் நடித்த அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி என ஏராளமான படங்களில் அவர் செய்த கெட் அப் சேஞ்சுகளை பார்த்த நடிகர்கள் இன்றுவரை மிரண்டிருக்கிறார்கள்.
இயக்கத்திலும் புதுமை: நடிப்பு மட்டுமின்றி அவர் இயக்கிய விருமாண்டி, ஹேராம் ஆகிய படங்களும் இன்றுவரை தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க்காக இருக்கின்றன. குறிப்பாக விருமாண்டி படத்தின் திரைக்கதை புதுமையிலும் புதுமையாக இருந்தது. ஒரே கதையை இரண்டு பேர் தங்களது பார்வையில் விவரிக்கும் மாயாஜாலத்தை முதல்முதலில் திரையில் நிகழ்த்திக்காட்டியவர் கமல் ஹாசன். அதேபோல் அவர் கதை எழுதிய அன்பே சிவம் படம் வெளியானபோது கொண்டாடப்படாமல் இப்போது கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆளவந்தான்: கமல் ஹாசன் நடித்த படங்களில் முக்கியமான படம் ஆளவந்தான். சைக்கோபாத் த்ரில்லர் ஜானரில் அந்தக் கதையை அவர் எழுத திரைக்கதையையும் அவரே அமைத்திருந்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். 2001ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் அப்போது சரியாக போகவில்லை.
இருந்தாலும் இந்தப் படமும் பல வருடங்கள் கழித்து இப்போது அந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அந்தப் படத்தில் பல புதிய தொழில்நுட்பங்களை அவர் புகுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ஏமாற்றிய கமல் ஹாசன்: ஆனால் ஆளவந்தான் படத்தை தயாரித்ததால் கலைப்புலி தாணுவுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. தாணுவிடம் கமல் ஹாசன் சொன்ன கதையே வேறாம். அதாவது முதலில் நளதமயந்தி கதையை கூறியிருக்கிறார் கமல். அது தாணுவுக்கு பிடிக்காமல் போக, அடுத்ததாக பம்மல் கே சம்பந்தம் கதையைத்தான் கூறினாராம். அந்தக் கதை பிடித்ததால் தாணு தயாரிக்க ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் ஷூட்டிங் போகப்போக ஆளவந்தான் கதையை படமாக்கிக்கொண்டிருந்தாராம் கமல் ஹாசன்.
விட்டுக்கொடுத்த தாணு: இதனை தெரிந்துகொண்ட தாணு, கமலுடன் பயணிப்பது ஒரு சுகானுபவம் என நினைத்து விட்டுக்கொடுத்துவிட்டாராம். அதனையடுத்துதான் சச்சின், தொட்டி ஜெயா, காக்க காக்க, மாயாவி, புன்னகை பூவே ஆகிய ஐந்து படங்களை தயாரித்து ஆளவந்தான் படத்தால் உருவான கடனை அடைத்தாராம் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இதனை அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.