பெருநாள் – ரம்ஜான் சிறப்புச் சிறுகதை!

“தராவியா தொழுக இன்னைக்கு உண்டுமா இல்லியான்னு பெத்தா கேட்டு வரச் சொன்னா” என்றவாறே வந்தான் கரீம்.

“இப்பத்தானலே நோம்பு தொறந்திருக்கு. அதுக்குள்ள நஹரா அடிக்கணுமாக்கும். இன்னும் தேரம் இருக்குன்னு போய்ச் சொல்லுல” என்றார் வஹாப் சாஹிப். அவர்தான் வடக்குப் பள்ளிவாசல் தெரு ஜமாஅத் தலைவர். 

“எதுக்குக் கோபப்படுதியோ? சின்னப் பையன்தானே கேக்கான்?” என்றார் பானா பானா – ஆறிப்போன தேத்தண்ணியின் கடைசிச் சொட்டை நாக்கில் இட்டுச் சுவைத்தவாறே.

பாதுஷா பாவலரின் சுருக்கம்தான் பானா பானா. அவர் எப்போது பாவலர் ஆனார் என்பது இங்கே அவசியமில்லாத விஷயமென்றாலும்‌ அவரே அப்படிச் சொல்லிக் கொள்வார் என்றுதான் தெருவுக்குள் பேசிக் கொள்கிறார்கள். 

தலைவரை சமாதானப்படுத்துவதற்காகத்தான் அவர் அப்படிச் சொன்னார் என்று நீங்கள் நினைத்தால் தவறு. அவர் மெல்ல எடுத்துக் கொடுக்கிறார் என்று அர்த்தம். வாழ்க்கையில் நல்ல பிள்ளை போல தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லையென்பது‌போல இப்படித் தூண்டி விடும் அற்பர்களை நீங்களும் சந்தித்திருக்கலாம். இந்த வில்லங்க விஷங்களின்  சூட்சுமம் புரிந்தவர்கள் அதனைத் தவிர்ப்பார்கள். மற்றவர்கள் புரியாமல் நடனமாடுவார்கள் வஹாப் சாஹிபைப் போல.

“என்னவோய் பானா பானா… வெவரம் கெட்டத்தனமா பேசிட்டு கெடக்கீரு? பொறயப் பாத்த பொறவுதானே பெருநாளா இல்லயான்னு சொல்ல முடியும்? இப்பமே கேட்டா என்னத்த சொல்லச் சொல்லுதீரு?”

“இருக்குன்னு சொல்லுங்கோ அல்லது இல்லன்னு சொல்லுங்கோ. ரெண்டுமில்லாம எதுக்குக் கோபப்பட்டுக்கிட்டு? ” 

“ஆமா எங்கவூட்டு மெத்தயில பொற தெரியுது‌ பாரும். இருக்கு இல்லன்னு திடமா சொல்லதுக்கு. வெளங்காமப் பேசாம போரும்.”

பெருநாள் – சிறுகதை!

“சரி சரி. கோபப்படாதிய. நோம்பு முடியுதுன்னாலே தன்னால கோபம் திரும்பவும் வந்துடும் போல” என்று பானா பானா பம்முவது போல நடித்தவர் அப்படியே கரீம் பக்கமாகத் திரும்பி, “சரிடே வா. தலைவர் கோவமா இருக்காரு. பொறவு பேசிக்கலாம்” என்றவாறே கரீமுடன் நடக்கத் தொடங்கினார். கரீமோ பாதி சமோசாவைத் தின்று முடிப்பதற்குள்ளாக பெருநாள் பற்றிக் கேட்டு வரச் சொன்ன கோபத்தில் அமைதியாயிருந்தான்.

“எலே கரீமு, என்னலே அமைதியா நடக்க? தலைவர் சொன்னது புரிஞ்சுதால?”

“அவங்கதான்‌ ஒண்ணும் சொல்லலியே” என்றான் கரீம் கடுப்புடன்

“பாத்தியா சின்னப் பயங்குறது சரியாத்தாம்ல இருக்கு. எலே! அவருட்ட தராவியா இருக்கான்னு கேட்டா இருக்கு இல்லன்னுதான சொல்லணும். வெளங்காப் பேச்சுன்னு திட்டுதாரு. பெரிய மனுசன்‌ பண்ணுத வேலயா இது? பெத்தா கிட்டப் போய்  அவரு திட்டுதாருன்னு சொல்லு. என்னா?” வாழைப்பழத்தில் கடப்பாறையைச் சொருகினார் பானா பானா.

கரீம் ஏழாவது படிக்கும் பையனென்றாலும் கொஞ்சம் விவரமானவன். ஒழுங்காக ஓதவலிக்கும் பள்ளிவாசலுக்கும் போய் வருபவன்.

பானா பானாவைப் பார்த்து, “பெரிய மனுசன் பண்ற வேலையா அதுன்னு வஹாபப்பாவைச் சொல்லிட்டு நீங்க என்ன செய்தியோ? சொல்லுதேன்னு தப்பா எடுக்காதியோ. நீங்க நெசம்மாவே வெளங்காத பேச்சுத்தான் பேசுதியோ” என்ன நடக்கிறதென்று பானா பானா உணர்வதற்குள்ளாகவே சைக்கிளில் ஏறிப் பறந்து விட்டான் கரீம். சின்னப்பயலிடம் ஏச்சு வாங்கியதைப் பற்றிய கவலையில்லாமல் பானா பானா வீட்டிற்குப் புறப்பட்டார்.

இருபத்தொன்பது நோன்புகள் முடிந்துவிட்டன. முப்பதாவது நோன்பைத் தொடர்வதா அல்லது பெருநாள் என்று அறிவிப்பதா என்பதைப் பிறையைப் பார்த்துத்தான் முடிவு செய்ய வேண்டும். நாளை நோன்பு இருந்தால் பிரச்னையில்லை. ஆனால் நோன்பில்லையென்றால் பெருநாளைக்கான ஆயத்த வேலைகளை இன்றே மேற்கொண்டாக வேண்டும். அதனால்தான் தன் பேரன் கரீமை ஜமா அத் தலைவர் வஹாப் சாஹிபிடம் அனுப்பி நோன்புக் காலங்களில் இடம் பெறும் சிறப்புத் தொழுகையான தராவீஹ் தொழுகை இருக்கிறதா என்று கேட்டனுப்பியிருந்தார் ஆயிஷா உம்மா. ஆனால் தெருவிலும் வீட்டிலும் அனைவரும் அவரை அழைப்பதென்னவோ ஐசாம்மா என்றுதான்.

ரம்ஜான்

“கொள்ளைல போவியோ… எங்க வாப்பா என்ன அழகா ஆயிஷா நாயகியோட பேரை வச்சிருக்கா எனக்கு. அதப் போயி இப்படிக் கூப்பிட்டுத் தொலைதியலே” என்று எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து அலுத்துப் போனார் ஐசாம்மா.

“என்ன ஐசாம்மா… அப்ப பெருநாள் நாளைக்கு இருக்கா இல்லையா? தலைவரு என்ன சொன்னாராம்?” என்றவாறே வந்தார் ரஹ்மாயி. அவரது உண்மைப்பெயர் ரஹீமா பீவி என்றாலும் அந்தப் பெயரில் அழைத்தால் அவரே திரும்பிப் பார்க்க மாட்டார்.

“ஒண்ணும் சொல்லலியாம்…”

“காயல்பட்டணத்துல பொற தெரிஞ்சிச்சுன்னு புஹாரி சொன்னானே?”

“யாருலா? ஜமீலா மொவனா?”

“ஆமா லாத்தா. அவனேதான்.”

“மஹ்ரிபே இப்பதான் தொழுது முடிஞ்சிருக்கு. அதுக்குள்ள அவனுக்கு மட்டும் பொற தெரிஞ்சிட்டாமாக்கும்? ஹைவான் பொய் சொல்லிருப்பாம்லா!”

“நான் என்னத்தக் கண்டேன் லாத்தா? அவன் சொன்னதச் சொன்னேன். நாளைக்குப் பெருநாளா இல்லயான்னு தெரிஞ்சாத்தானே மாடறுக்க முடியும். அதான் ரோசனையா இருக்கு!”

“சரிதாம்லா. எப்படியும் ஒரு பத்து மணிக்குள்ள பொற கண்ட செய்தி வந்துடும். போன பெருநாளைக்கு ஆதம் அலி தச்சநல்லூர்லருந்து போன் போட்டுச் சொன்ன மாதிரி யாராவது சொல்வாங்கலா. நீ கொஞ்சம் பொறு!”

“பத்து மணிக்குள்ள செய்தி வந்தா சரிதான் லாத்தா. நான் போய் வேலயப் பாக்கேன்!”

“தேத்தண்ணி குடிச்சிட்டுப் போயம்லா…”

“இல்ல லாத்தா. மாட்டு யாவாரி வந்துட்டா கால்ல வெண்ணியக் கொட்டுன மாதிரில்லா பறப்பான். நான் போய்ட்டு பொறவு வரேன். தேத்தண்ணி எங்க போய்டப் போவுது” கிளம்பினார் ரஹ்மாயி. 

ரஹ்மாயி ஊரில் மாட்டுக்கறி வியாபாரம் செய்யும் பெண்மணி. கணவன் இறந்தபிறகு, பிழைக்க வேறு போக்கில்லாமல் மாட்டுக்கறி வியாபாரம் செய்யத் தொடங்கி, அதையே முழுநேரத் தொழிலாக்கிக் குடும்பத்தைக் கரைசேர்த்து விட்ட தைரியசாலி. “எங்க வூட்ல இன்னைக்கு ரஹ்மாயி” என்று யாராவது சொன்னால் அவர்கள் வீட்டில் மாட்டுக்கறி சமைத்திருக்கிறார்கள் என்று பொருள்.

ரம்ஜான்

தன் வீட்டுக்குள் நுழைந்த ரஹ்மாயியிடம் “என்னம்மா ஐசா பெத்தா என்ன சொன்னா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் அவரது பேத்தி நசீமா. சில நாள்களுக்கு முன் பெருநாளுக்காக, ஏரலில் போய் எடுத்து வந்த புதிய உடுப்பைப் போட்டுப் பார்க்கும் ஆர்வம் அந்தக் குரலில்.

“மட்ட… போய் வேலயப் பாருலா. பெருநா வந்தா சொல்ல மாட்டனா?” என்று கடுப்பைப் பேத்தியிடம் காட்டினார் ரஹ்மாயி.

வீட்டு வளவுக்குப் போய் வானத்தை நிமிர்ந்து பார்த்த ரஹ்மாயிக்கு ஆத்திரமாக வந்தது. “அட கொள்ளைல போன வானமால்லாம்மா கெடக்கு. இப்படி கறுத்துக்கெடந்தா பொற எப்படி தெரியும்?” என நினைத்தவாறே வளவில் கட்டியிருந்த மாட்டுக்குத் தண்ணீர் வைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார்.

மணி எட்டாகியிருந்தது. வஹாப் சாஹிப் தனக்குத் தெரிந்த பக்கத்து ஊர்களுக்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசி பிறை தெரிந்தால் தகவல் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். தெருவில் இரண்டு வீடுகளில்தான் தொலைபேசி இருந்தது. ஒன்று ஐசாம்மா வீட்டிலும் இன்னொன்று வஹாப் சாஹிப் வீட்டிலும். 

பெண்கள் எல்லாரும் அவரவர் திண்ணைகளில் அமர்ந்து பெருநாள் செய்தி கிடைத்தால் சமையலுக்கு என்னென்ன செய்யலாமென்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்க, ஆண்கள் பள்ளிவாசல் முற்றத்தில் கூடியிருந்தார்கள்.

“ஒன்பது மணி வரைக்கும் பாப்போம் இல்லன்னா தொழுதுட்டு போய் நோன்பு புடிப்போம். என்ன லெப்பப்பா சொல்லுதிங்க?” என்றார் சீனாப்பா. சீனாப்பாவின் இயற்பெயர் காதர் முகைதீன். அவர் எப்படி சீனாப்பா ஆனாரென்பது சீன ரகசியம். 

“நீங்க சொல்றது சரிதான் சீனாப்பா. பத்து மணிக்குத் தகவல் வந்தா வரட்டுமே. நாம பாட்டுக்கு தொழுது முடிச்சிடுவோம்” எப்போதும் போல அதிராத குரலில் மென்மையாகச் சொன்னார் நூருதீன் லெப்பை.

“அதெப்படி லெப்பப்பா? பொற கண்டாச்சுன்னு செய்தி வந்துட்டா தராவியா தொழக்கூடாதுன்னு சட்டமிருக்கா இல்லியா?” எங்கே இன்றைக்கும் 20 ரக் அத்தும் தொழ வேண்டியிருக்குமோ என்ற சலிப்பில் சட்டம் பேசினார் மஜீத் பாய்.

ரம்ஜான்

“அஞ்சு வக்தும் வுடாமத்‌ தொழுவுற ஆளு மாதியே பேசுதாரு பாத்தியளா லெப்பை…” என்று பானா பானா வழக்கம்போல ஆரம்பித்ததும் சட்டென்று‌ அவர் சட்டையைப் பிடித்த மஜீத், “யோவ் எல்லார்ட்டயும்‌ வாய வுடுத மாதிரி என்கிட்டயும் வுடாதீரும். இழுத்து வச்சு திரும்ப சுன்னத் விட்டுருவேன்” என்றதும் கூடியிருந்தவர்கள் அவர்களை விலக்க, தன்னைப் பிடித்துக் கொள்ள ஆளிருக்கும் தைரியத்தில், “எலே. என்‌மேலயா கை வைக்க? உன்னை என்ன செய்தம் பாருல ஹராம் பொறந்தவனே” என்றதும் ‘பொத்’தென்று சத்தம் கேட்டது. 

பானா பானா கன்னத்தைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். 

“என்ன மஜீது இப்படி பள்ளிவாசல்ல வச்சா சண்ட போடுறது? அல்லாஹ் பொறுமையாளர்களோடு இருப்பேன்னு சொல்லியிருக்கான். இப்படியா பொறுமையில்லாம நடப்பியோ?” லெப்பை மஜீதைப் பார்த்துச் சொன்னார்.

“பொறவென்ன லெப்பப்பா. என்ன சொன்னாலும் வம்பிழுத்துட்டே இருந்தா…”

“சரி விடுங்கப்பா. எலே… எவனாவது போய் நஹராவை அடிங்கலே. லெப்பை. நீங்க தொழுகைய ஆரம்பிங்க. பெருநாள் வந்தா பாத்துக்கலாம்” என்றார் வஹாப் சாஹிப்.

“அந்தக் கள்ள காபிர் என்னை அடிச்சிருக்கான். அவனை ஊர்விலக்கம் செய்யணும்” வலியோடு விறைப்பாகப் பேசினார் பானா பானா. 

“ஓஹோ… அது வேற செய்வியளோ?” 

“அல்லாஹ்வே! கொஞ்சம் பொறுமையாத்தான் இருங்களேன் ரெண்டு பேரும்.” நூர்தீன் லெப்பைக் கெஞ்சாத குரலில் அமைதிப்படுத்த முனைந்தார்.

“என்னத்தப் பொறுமையா இருக்கச் சொல்லுதியோ? பள்ளிவாசல்ல வச்சு ரவுடித்தனம் பண்ணுதான்…”

“யாருவே ரவுடி?” என்று மஜீத் மீண்டும் சீறிப்பாய, இரண்டு‌பேரையும் பிடித்து நிறுத்தக் கொஞ்ச நேரமானது.

“இது பள்ளிவாசல்ங்குற நெனப்பாவது இருக்கால உங்க ரெண்டு பேருக்கும். தெருவுல போய் சண்டை போடுங்களேம்ல செய்த்தானுங்களா?” விறகுக்கடை அப்பா கடும் கோபமானார். விறகுக்கடை அப்பாவின் உண்மையான பெயர் என்னவென்று எனக்கும் தெரியாது.

ரம்ஜான்

“என்னைக்‌ கைநீட்டி அடிச்ச பள்ளிவாசல்ல நான் இனிமே தொழ மாட்டேன். இனிமே பெரிய பள்ளில போய்தான் தொழுவேன். அந்த ஜமா அத்ல போய் சேந்துக்குறேன்.” என்று வீரசபதமெடுத்தவாறே பானா பானா வெளியேற ‘டம் டம்’ என்று நஹரா சத்தம் கேட்கத் தொடங்கியது. 

“சரி வாங்க. தொழுது முடிச்சிடுவோம்” என்று நூர்தீன் லெப்பை  அழைக்க ஆண்கள் பள்ளிவாசலுக்குள் தொழச் சென்ற அதே நேரத்தில்…

“என்னா நஹரா சத்தம்‌ கேட்குது? அப்ப நாளைக்குப் பெருநா இல்ல போல” என்று பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு கலைந்து தங்கள் வீடுகளுக்குள் நுழைந்தார்கள்.  

தராவீஹ் தொழுகை முடிந்து எல்லோரும் வீடு திரும்பி வெகு நேரமாகியும் எந்தத் தகவலும் வெளியூர்களிலிருந்து கிடைக்காததால் அடுத்த நாள் நோன்பு வைக்கும் ஆயத்தத்தோடு எல்லோரும் தூங்கச் சென்றுவிட, அது வரை வீட்டு வாசல்களிலெல்லாம் போடப்பட்டிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டு தெரு மொத்தமும் இருட்டில் கவிழ்ந்திருந்தது.

கொஞ்ச நேரம் சென்றபின், வஹாப் சாஹிப் வீட்டு அழைப்பு மணி அடிக்கப்பட்டது. அரைத் தூக்கத்தில் கதவைத் திறந்த வஹாப் சாஹிபிடம், 

“பேட்டயில் பொற தெரிஞ்சுதாம் காக்கா. நாளைக்குத்தான் பெருநாளாம்” மூச்சிரைக்கச் சொன்னார் சுல்தான். நல்லவேளையாக அவர் பெயர் சுல்தான்தான். பெயரில் மாற்றம் ஏதுமில்லை.

வஹாப் சாஹிப் சாரத்தை உதறித் திரும்பக் கட்டிக் கொண்டு “இப்ப மணி என்ன வாப்பா?” என்றார் சுல்தானிடம்.

“பன்னிரண்டரையாச்சு காக்கா” என்றார் சுல்தான்

“பன்னிரண்டரை மணிக்குப் பொறவு ரஹ்மாயி‌ மயிரால மாடறுப்பா? போய்த் தூங்குங்கலே. பெருநாள் நாளை மறுநாள்தான் போ” என்றவாறே கதவடைத்து விட்டு உள்ளே போய்விட்டார் வஹாப் சாஹிப்.

வானம் நடந்தவைகளை எல்லாம் மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

– ஆசிப் மீரான்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.