உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. இதில் நாளை காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, விழா நடக்கும் நாட்களில் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் கற்பகவிருட்சம், பூதம், வெள்ளி சிம்மாசனம், தங்க சப்பரம், ரிஷபம், மரவர்ண சப்பரம், இந்திர விமானம் உள்ளிட்ட வாகனங்களில் 4 மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
இதில் ஏப்ரல் 28-ஆம் தேதி, தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம், நான்கு மாசி வீதிகளில் புறப்பாடு நடைபெறும் என்றும், ஏப்ரல் 30-ஆம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், மே மாதம் 1-ந் தேதி திக்கு விஜயம் இந்திர விமானம் வைபவமும் நடைபெறுகிறது.
2-ஆம் தேதி, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவமும், 3-ஆம் தேதி மாசி வீதிகளில் சுவாமி திருத்தேரோட்டம் நடைபெறும். இதைத்தொடர்ந்து மே மாதம் 4-ஆம் தேதி சித்திரை பெருவிழா நிறைவு நிகழ்ச்சியும், 5-ஆம் தேதி மிகவும் பிரசித்தி பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும். இதற்கான முன்னேற்பாடு நிகழ்வுகளை கோவிலில் நிர்வாகம் செய்து வருகிறது.