அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து, புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுக தொடர்பான தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் ஆதித்தன், கே சி சுரேன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுகவின் புதிய விதிகளை ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக அங்கீகரித்ததற்கு இருவரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து இந்த வழக்கை தொடர்ந்து உள்ளனர்.
கிட்டத்தட்ட 14 காரணங்களை சுட்டிக்காட்டி இந்த இருவரும் தங்களது மனுவை புகாராக தாக்கல் செய்துள்ளனர்.
அதில், குறிப்பாக தேர்தல் ஆணையம் தங்களது தரப்பு கோரிக்கைகளை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் இது குறித்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதே தேர்தல் ஆணையம் இப்படியான ஒரு முடிவை எடுத்து உள்ளது என்றும் சுட்டி காட்டியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை பொருத்தவரை ஒட்டுமொத்தமாக மூன்று பேர் மட்டுமே போட்டியிடும் வகையில் சட்ட விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளார்கள். இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.