மதுரை: தமிழக அரசின் 12 மணி நேர வேலைச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று மதுரையில் சாலை மறியல் ஈடுபட்டனர். பெரியார் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.
அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.பாவேல் சிந்தன் தலைமையில் வாலிபர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் த.செல்வா, மாவட்ட நிர்வாகிகள் வேல்தேவா, நிருபனா, நவீன், கெளதம், பாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்டத் தலைவர் அ.பாவெல் சிந்தன் பேசும்போது, “தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை ஏப்.21-ல் சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது. இது மத்திய பாஜக அரசு 2020-ல் கொண்டுவந்த தொழிலாளர்கள் விரோத சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த நினைப்பது தவறான முன்னுதாரணமாகும்.
12 மணி நேர வேலையாக நீட்டிப்பு செய்யும் இந்த சட்டம் உழைப்பாளர்களின் உழைப்பைச் சுரண்ட முதலாளிகளுக்கு சாதகமான சட்டமாகவே இது உள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் 8 மணி வேலை நேரத்தை 12 மணி மணி நேரமாக உயர்த்தியதற்கு திமுக அப்போது கண்டனம் தெரிவித்தது. ஆனால், தற்போது பாஜக ஆளும்கட்சியாக இல்லாத மாநிலங்களில் இச்சட்டம் இயற்றப்பட்டது என்றால், அது தமிழ்நாடு மட்டும் தான். 150 வருடங்களாக போராடி பெற்ற உரிமையை தற்போதைய திமுகவின் சமூக நீதி ஆட்சியில் காவு வாங்கும் இச்சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என்றார்.
–