சென்னை : ராமாயண கதையை மையமாக வைத்து 3டியில் உருவாகி வரும் பான் இந்திய திரைப்படம் படம் தான் ஆதிபுருஷ்.
பிரபாஸ் ராமராகவும் கீர்த்தி சனோன் சீதையாகவும் சைஃப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.
ஓம் ராவத் இயக்கியுள்ள இந்தப் படத்தை டிசீரிஸ் பிலிம்ஸ் சார்பில் பூஷன் குமார் தயாரித்துள்ளார்.
ஆதிபுரூஸ் : பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரபாஸ், ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வருகிறது இப்படம். பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. டீசரைப் பார்த்த ரசிகர்கள் கார்ட்டூன் கதாபாத்திரத்தைப் பார்ப்பது போல இருக்கிறது என்று கண்டபடி விமர்சித்தனர்.
ஜூன் 16ந் தேதி ரிலீஸ் : டீசருக்கு வந்த மோசமான விமர்சனத்தால் நொந்து போன இயக்குநர் ஓம் ரவுத் , தனது ட்விட்டர் பக்கத்தில்,.பார்வையாளர்களுக்கு முழுமையான காட்சி அனுபவத்தை வழங்க, படக்குழுவிற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. இதனால், ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16 ந்தேதி வெளியாகும் என்றும், இந்தியாவே பெருமைப்படும் ஒரு படத்தை உருவாக்குகிறோம். உங்களின் ஆதரவும் அன்பும் ஆசிர்வாதமும் எங்களுக்கு என்றென்னும் தேவை என வெளியிட்டு இருந்தார்.
சர்ச்சைக்குள்ளான போட்டோ : இதையடுத்து, ராமநவமி அன்று படத்தின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அந்த போஸ்டரில், ராமராக பிரபாஸ், சீதாவாக க்ரீத்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் இருந்தனர். இந்த போஸ்டரில் பகவான் ஸ்ரீ ராமர் இந்து வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கைக்கு மாறான உடையில் இருக்கிறார் என்றும், இது இந்து மதத்தை புண்படுத்தும் செயலாகும் என்று படக்குழு மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

படம் எவ்வளவு மோசமாக இருக்குமோ : இந்நிலையில், இன்று படக்குழு 5 மொழியில் படத்தின் புது போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரைப்பார்த்த ரசிகர்கள். விமர்சனத்திற்கு உள்ளான டீசர் வெளியாகி கிட்டத்தட்ட் ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் புது டீசர் வெளியாகவில்லை என்றும், பழைய டீசரின் படங்களை புதிய படத்துடன் ஒப்பிட்டு இரண்டுக்கும் பெரியதாக வித்தியாசம் எதுவுமே இல்லை. கதாபாத்திரம் மற்றும் செட் வடிவமைப்பை இதுவரை சரி செய்ய முடியவில்லை. படம் எவ்வளவு மோசமாக இருக்குமோ, என மீண்டும் இணையவாசிகள் ஆதிபுரூஷ் படத்தை ட்ரோல் செய்ய தொடங்கி உள்ளனர்.