கருக்கலைப்பு மருந்துக்கு அமெரிக்காவில் அனுமதி | Abortion drug approved in US

வாஷிங்டன்,-அமெரிக்காவில் கருக்கலைப்பு மருந்து பயன்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவில் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ளும் உரிமை, கடந்த 50 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், இதற்கான சட்டப்பூர்வ உத்தரவை கடந்த ஆண்டு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நாடு முழுதும் போராட்டங்கள் வெடித்தன.

அதிருப்தி

தீர்ப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய பெண்கள், கருக்கலைப்பு தங்கள் உரிமை என வலியுறுத்தினர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பலரும், நீதிமன்ற தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்தனர்.

நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அமெரிக்காவின் 13 மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

இதற்கான மருந்து விற்பனைக்கும் தடை செய்யப்பட்டது. ஆனால், பிற மாகாணங்களில் வழக்கம்போல் கருக்கலைப்புக்கான, ‘மைப்பிரிஸ்டோன்’ உள்ளிட்ட மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பான வழக்குகளில் டெக்சாஸ் மற்றும் வாஷிங்டன் நீதிமன்றங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியதால், கருக்கலைப்பு பிரச்னை முடிவுக்கு வராமல் இழுபறியில் நீடித்தது.

அதேசமயம், கருக்கலைப்புக்கு அனுமதி அல்லது தடை குறித்த முடிவு எடுப்பதற்கு அதிக காலம் தேவைப்படுவதாகக் கூறி, கீழ் நீதிமன்றங்களின் கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இந்த சூழலில் கருக்கலைப்பு மருந்தான மைப்பிரிஸ்டோனை தயாரித்து வரும், ‘டான்கோ’ நிறுவனம் மற்றும் அமெரிக்க அதிபரின் நீதித் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசரகால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில், இந்த மருந்துகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட, கீழ் நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என கோரப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், கருக்கலைப்பு மருந்து பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப் பாடுகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது.

மைப்பிரிஸ்டோன்

இது குறித்து அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ”கீழ் நீதிமன்றங்களின் முடிவுகள், உணவு மற்றும் மருந்து கழகத்தின் மருத்துவ நடைமுறைகளை முடக்கி, பெண்களின் சுகாதார விஷயங்களை ஆபத்தில் தள்ளியது-. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் கருக்கலைப்பு மருந்து தொடர்ந்து கிடைக்கும்,” என்றார்.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து அமெரிக்காவில் 56 லட்சம் பேர் பயன்படுத்திய மைப்பிரிஸ்டோன் மருந்து பயன்பாட்டுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.