ஒரு புத்தகம்… நுாறுநண்பர்களுக்கு சமம் என்று சொல்லலாம். புத்தகங்களை வாசிப்பது அறிவை பெருக்குகிறது.எழுத்துத்திறனை மேம்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கிறது.விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம் போல் சமூகம், தனிமனித ஒழுக்கத்துக்கான கருத்துக்களை புத்தகங்கள்தன்னுள் புதைத்து வைத்துள்ளன.
வரலாற்று நிகழ்வுகளையும், இன்றைய செய்திகளையும் எழுத்தின் வழியேஎதிர்கால தலைமுறைக்கு கொண்டு செல்ல பதிவு செய்யப்பட்ட பொக்கிஷங்களே புத்தகங்கள். வாசிப்பை சுவாசமாக கருதி நேசிப்போம்.உலக புத்தக தினத்தில்புத்தகம் படிப்பதை ஊக்குவிப்போம்…
பயனுள்ள ‘பட்டம்’
ஆ.லதாமகேஸ்வரி, ஆசிரியர், திண்டுக்கல்: தோண்ட தோண்ட தான் கிணற்றில் நீர் சுரக்கும். அது போல் கற்க கற்கதான் அறிவு ஊற்றுக்குள் நமக்குள் பெருகும். புத்தகங்களை படிக்கும் பழக்கம் மன அழுத்தத்தை குறைக்கிறது. எந்தசூழலையும் தைரியமாக எதிர்கொள்ளும் வலிமையை புத்தகங்கள் தருகின்றன. புத்தகங்களை படிப்பதால் சிந்தனைவளரும். சிறந்த புத்தகம் நுாறு நண்பர்களுக்கு சமம். புத்தகங்களை விட சிறந்த நண்பர்கள் வேறு எதுவும் இல்லை.
கடந்த காலங்களை எதிர்காலத்தோடு இணைக்கும் பாலமாக இருக்கின்றன புத்தகங்கள். தலை குணிந்து புத்தகங்களைபடித்தால் தலைநிமிர்ந்து வாழலாம். இன்றைய காலத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.ஒவ்வொருவரும் புத்தகம் படிப்பதை கடமையாக கொள்ள வேண்டும். புத்தகங்கள் பல பாடங்களை நமக்கு கற்றுதருகிறது. வார இதழ், மாத இதழ்கள் இருந்தாலும் தினமலர்’ நாளிதழில் வரும் பட்டம்’ இதழ் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. மாணவர்களிடையே படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது.
கற்பனை திறன் வளரும்
எஸ்.வாசுகி, முதல்வர், பழனியாண்டவர் கலை அறிவியல் கல்லுாரி, ஒட்டன்சத்திரம்: ஒரு புத்தகத்தை முழுமையாக வாசிப்பது மிகப்பெரிய அனுபவத்தை வழங்குகிறது. ஒரு குறிப்பிட்ட நாட்டின் புத்தகத்தைப் படிப்பது அந் நாட்டிற்கு சுற்றுலா சென்று வந்த அனுபவத்தை ஏற்படுத்துகிறது. சமீப கால ஆராய்ச்சிகள் ,புத்தகம் வாசிப்பதால் ஒருவருடைய மன அமைதி, ஒருமைப்பாடு, யோசிக்கும் திறன், படைப்பாற்றல், பகுத்தறிதல் , மொழித்திறன் மேம்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன. தினமும் 30 நிமிடங்கள் வாசிப்பது என்பது ஒருவருடைய வாழ்நாளை கூட்டுகிறது என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். புத்தகங்கள் வாசிப்பதால் ஒருவருடைய கற்பனைத்திறன் மேம்படுகிறது. உலகில் புகழ்பெற்ற அனைவருமே புத்தகங்களை நண்பர்களாக பாவித்தவர்களே.
ஞாபகசக்தி அதிகரிக்கும்
கீதா, ஆசிரியர் ஊ.ஒ.தொ. பள்ளி, புது அத்திக்கோம்பை: உலகில் தோன்றி மறைந்த அனைத்து சாதனையாளர்களும் தன்னை முழு மனிதனாகி கொண்டது வாசிப்பு பழக்கத்தின் மூலமே. ரூ. ஒரு கோடி கிடைத்தால் நுாலகம் கட்டுவேன் என்றார் காந்தியடிகள். வாசிப்பு என்பது ஆளுமை விருத்தி, ஞாபக சக்தி அதிகரிப்பு, வளர்ச்சி, தன்னம்பிக்கை அனைத்து பண்புகளையும் உள்ளடக்கிய படைப்பு கொண்டது. இன்றைக்கு சமூகத்தில் பெரும்பாலான குடும்பங்களில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் சமாதி ஆகி விட்டது. வீட்டில் புத்தகங்களை விரும்பிப் படிக்கும் தம்பதியரை, குழந்தைகளை அரிதாகவே பார்க்க முடிகிறது. மனித மனம் ஒரு கரு. அது வாசிப்பு இல்லாமல் இருக்கும் போது முழுமையான மனிதனை வளரச் செய்யாது.
வாசிப்பு இல்லாத மனதில் அறியாமை இருள் சூழ ஆரம்பித்து விடும். வாசிப்பு நம்மை அரவணைக்கும் தாய், வலிமையையும் தேடலையும் கற்றுக்கொடுக்கும் தந்தை. கருத்தைப் பகிர செய்யும் மிகச் சிறந்த நண்பன்.
மனதை ஒருமுகப்படுத்தும்
தேவி, உதவிப் பேராசிரியர், பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரி,பழநி; புத்தகங்கள் அனைத்து விதமான அறிவையும் ஒட்டுமொத்தமாக தரக்கூடியது. எண்ணங்களையும், செயல்களையும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு புத்தகங்கள் கொண்டு செல்லும். மறைந்தவரின் கருத்துகளை நம்முடன் பேச வைப்பது நுாலகமும், புத்தகங்களும் மட்டுமே. புத்தகத்தை முழுமையாக படிக்காமல் சுருக்கமாக படிக்கும் எண்ணத்தில் பலர் உள்ளனர். இருப்பினும் புத்தக கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் அதிகம் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். புத்தகம் வாசிப்பது தியானம் செய்வது போன்றது.
மனதை ஒருமுகப்படுத்தி நல்வழிப்படுத்தும்.வளம்தரும் ஆயுதம் புத்தகங்கள் ப.கருப்பையா (ஆசிரியர், அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி, நெல்லூர்): உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களை நினைவுபடுத்தும் வகையில் உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. அறிவுசார் சொத்துக்களான புத்தகங்களைப் பாதுகாப்பது அவசியம். உலகின் பல பகுதிகளின் தகவல்களை இவை ஒருங்கிணைக்கின்றன.
தேடுதல் இன்றி வாழ்க்கையின் எந்த உச்சமும் கிடைத்துவிடுவதில்லை. தேடலின் ஆரம்பப் புள்ளியே, புத்தகங்கள்தான். புத்தக வாசிப்பு சூழல் இல்லாத நிலையே தற்போதைய மாணவர்களின் மன அழுத்த பிரச்னைக்கு 90 சதவீத காரணமாகும். வாசிப்பு பயிற்சி மட்டுமே சிந்தனை வளமும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் உருவாக்குகிறது. வாசிப்போரின் மனம் மகிழ்ச்சி அடைவது மட்டுமின்றி தெளிவான நல்ல சிந்தனைகளை உருவாக்கும் வளம் தரும் ஆயுதம் புத்தகங்கள்.தலைவர்களாக பரிணமிக்க முடியும் கு.ம.வசந்தகுமார், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆசிரியர், குளிப்பட்டி: ஒரு நுாலகம் திறக்கும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்றார் விக்டர்ஹியூகோ.
நல்ல புத்தகம் சிறந்த நண்பன். இன்றைய சூழ்நிலையில் மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பு மிகவும் குறைந்துள்ளது. அலைபேசி பயன்பாடு அதிகரித்துள்ளதால் மாணவர்களிடம் மன அழுத்தம் அதிகரித்து காணப்படுகிறது. வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலம் இன்றைய மாணவர்களின் மன அழுத்தம் காணாமல் போகும். நாளைய தலைவர்களாக பரிணமிக்க முடியும். உலகின் பெரிய தலைவர்கள் எல்லாம் புத்தக வாசிப்புப் பழக்கத்தின் மூலம் உருவானவர்களே.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்