வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடிக்க டி.கே.சிவக்குமார் முயற்சி – பசவராஜ் பொம்மை

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

குளத்தில் தண்ணீர் இல்லை

பா.ஜனதாவின் அணை உடைந்து, தண்ணீர் காலியாகி இருப்பதாக டி.கே.சிவக்குமார் கூறி இருக்கிறார். முதலில் காங்கிரஸ் குளத்தில் தண்ணீர் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் தண்ணீர் எப்படி பாய்ந்து ஓடும். முதலில் காங்கிரசில் என்ன நடக்கிறது என்பதை டி.கே.சிவக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும். பா.ஜனதா கட்சி பற்றி அவர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

எங்கள் கட்சியின் மேலிடம் மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. கட்சிக்குள் எந்த பிரச்சினை வந்தாலும், அதனை சரிசெய்யும் சாமர்த்தியம் இருக்கிறது. எடியூரப்பா மற்றும் மத்திய மந்திரி ஷோபாவை கட்சியில் இருந்து ஒழிக்க சதி நடப்பதாக டி.கே.சிவக்குமார் கூறி இருப்பது வேடிக்கையாக உள்ளது. சித்தராமையாவை காங்கிரஸ் கட்சியினர் எப்படி முடக்கினார்கள் என்பது தெரியவில்லையா?.

சித்தராமையாவை தோற்கடிக்க முயற்சி

கடந்த சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா தோல்வி அடைய காங்கிரஸ் கட்சியே காரணம். தற்போது கூட வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடிக்க டி.கே.சிவக்குமார், அக்கட்சியின் தலைவர்கள் முயற்சிக்கிறார்கள். இது இந்த நாட்டுக்கே தெரிந்த விஷயம். கடந்த 2013-ம் ஆண்டு லிங்காயத் சமூகத்தை அழிப்பதற்காக, தனி மத அங்கீகாரம் கொடுப்பதாக கூறினார்கள். தேர்தல் முடிவுகள் என்ன ஆனது என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்கு தெரியும்.

டி.கே.சிவக்குமாரின் பேச்சு காரணமாக இந்த முறை லிங்காயத் சமூகத்தினர் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். லிங்காயத் சமூகத்தை பலப்படுத்தும் வேலையை காங்கிரசாரே செய்கின்றனர். அதுபற்றி பா.ஜனதா கவலைப்படவில்லை.

தேர்தல் ஆணையத்தின் பணி

சவதத்தி-எல்லம்மா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. யாருடைய வேட்பு மனுவை ஏற்க வேண்டும், யாருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையம், அதிகாரிகளின் பணியாகும். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் எதுவும் செய்ய சாத்தியமில்லை.

டி.கே.சிவக்குமார், தனது வேட்பு மனு விவகாரத்தை 2 நாட்கள் கையில் எடுத்து அரசியல் செய்தார். நாளை முதல் (அதாவது இன்று) எலகங்கா தொகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்க உள்ளேன். நடிகர் சுதீப் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார். சுதீப் எங்கெல்லாம் பிரசாரம் செய்ய உள்ளார் என்ற தகவல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.