பால்வினை நோய்கள் வராமல் இருக்க என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதுபற்றி இந்த வாரம் பேசுகிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.
“தங்கள் துணையுடன் உறவில் ஈடுபடுகிறவர்களுக்கு, பரஸ்பரம் நேர்மையாக இருப்பவர்களுக்கு, பொதுவாக பால்வினை நோய்கள் வருவதில்லை. புது நபர் அல்லது அறிமுகமில்லாத நபர் எனும்போது, காண்டம் பயன்படுத்துங்கள் அல்லது பயன்படுத்த அறிவுறுத்துங்கள், தேவைப்பட்டால் கட்டாயப்படுத்துங்கள்.
தவிர, உறவு முடிந்தவுடனே, பிறப்புறுப்பை சோப் பயன்படுத்திச் சுத்தப்படுத்துங்கள். உடனே சிறுநீரும் கழித்து விடுங்கள். இதன் மூலம் 90 சதவிகிதம் வரை பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துவிடுவீர்கள்.

காண்டம் பயன்படுத்தினால் மட்டும் போதாது, அதைச் சரியாகப் போட வேண்டுமென்பது இதில் முக்கியமான பாதுகாப்பான அம்சம். புது நபருடன் அல்லது காதல் துணையுடன் முதல்முறையாக உறவுகொள்ளும்போது, அவசரத்தில் காண்டமை சரியாகப் போடாமல் இருந்தால், பால்வினை நோய்கள் வரலாம். ஆண் மட்டுமல்ல, பெண்ணும் பாதுகாப்புக்கு காண்டம் அணிந்து கொள்ளலாம்.
லிப் லாக் செய்யும்போதும், உமிழ்நீர் வழியாகவும் நோய்கள் பரவலாம். இவர்கள் டென்டல் டாம் (dental dam) பயன்படுத்தலாம். ஆனால், இத்தனை பாதுகாப்பு உபகரணங்களுடன் உறவுகொள்ளும்போது என்ன சுகம் கிடைத்துவிட முடியும்” என்று கேள்வியெழுப்பியவர், தொடர்ந்து பேசினார்…

“ஒரு பார்ட்னரைவிட்டு இன்னொரு பார்ட்னருடன் உறவு கொள்கிறீர்கள் எனும்போது, அதற்கிடையில் 6 வார கால இடைவெளி இருக்க வேண்டும். இந்த இடைவெளியில் பால்வினை நோய்கள் ஏற்பட்டால் அறிகுறிகள் தெரிந்துவிடும். உடனே சிகிச்சையெடுத்து உங்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். உங்களுடைய ஒரு பார்ட்னருக்கு தொற்றைப் பரப்பாமல் தடுக்கவும் முடியும்” என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.