சென்னை: James Vasanthan (ஜேம்ஸ் வசந்தன்) ஒரு பாடலை குறிப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜாவை ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பதிவு மூலம் மீண்டும் சீண்டியிருக்கிறார்.
சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். அதன் பிறகு ஈசன், பசங்க, நாணயம், நாகராஜசோழன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். ஜேம்ஸ் வசந்தன் முதல் படமான சுப்ரமணியபுரத்தில் இசையமைத்த அத்தனை பாடல்களும் ஹிட்டாகின். குறிப்பாக கண்கள் இரண்டால் பாடலும், காதல் சிலுவையில் அறைந்தாள் என்ற பாடலும் படம் வெளியானபோது அனைவரது மனதிலும் இருந்தது.
இதனால் அவர் முதல் படத்திலேயே முன்னணிக்கு வந்துவிட்டார். அதன் பிறகு ஈசன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். கோலிவுட்டில் ஒரு நம்பிக்கைக்குரிய இசையமைப்பாளர் என்ற பெயர் எடுத்த ஜேம்ஸ் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்.
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக ஜேம்ஸ் வசந்தன்: ஜேம்ஸ் வசந்தன் இப்போது அனைவராலும் அறியப்படும் இசையமைப்பாளராக இருந்தாலும் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானது ஒரு தொகுப்பாளராகத்தான். சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் அவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அவை அனைத்தும் மக்களிடம் வரவேற்பையே பெற்றன.
இளையராஜா Vs ஜேம்ஸ் வசந்தன்: சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜேம்ஸ் வசந்தன் பதிவிடும் பதிவுகள் விவாதத்தை கிளப்புபவை. குறிப்பாக இளையராஜா குறித்து அவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் பலரால் பேசப்படும். அதேசமயம் இளையராஜா மீது ஜேம்ஸுக்கு ஏன் இவ்வளவு வன்மம், கோபம் என்ற கேள்வியும் எழும். ஆனால் அவர் மீது தனக்கு எந்த வன்மமோ, கோபமோ இல்லை அவர் செய்யும் தவறுகளை நான் சுட்டிக்காட்டுகிறேன் என்று ஜேம்ஸ் தொடர்ந்து கூறிவருபவர்.

மட்டமான ஆள்: சமீபத்தில்கூட இளையராஜா அமெரிக்காவில் பேசிய விஷயத்தை குறிப்பிட்டு அவர் ஒரு மட்டமான ஆள் என கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். சுப்ரமணியபுரம் படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியதால் ஜேம்ஸ் வசந்தனை நேரில் அழைத்து இளையராஜா கடுமையாக திட்டிவிட்டார். அதனால்தான் ஜேம்ஸ் வசந்தனுக்கு இளையராஜா மீது இன்னமும் கோபம் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இது என்றும் ஒரு தகவல் வெளியானது.
மீண்டும் விமர்சனம்: இந்நிலையில் இளையராஜாவின் பாடலை குறிப்பிட்டு ஜேம்ஸ் வசந்தன் முகநூலில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், “நேற்றுதான் இந்தப் பாடல் வரியைப் பார்த்தேன், அதிர்ச்சியுற்றேன். எப்படி இவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இந்தப் பிழையை அனுமதித்தார் என்று!
“என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்” இத்தனை நாளும் அது “… பல மின்னல் ஏழும் …” என்றே நினைத்திருந்தேன். ஒன்று, அந்தக் குறில் அந்த சந்தத்துக்கு வராது என்று சொல்லி கவிஞரை அந்தச் சொல்லை மாற்ற வைத்திருக்க வேண்டும். அல்லது, அது நன்றாக இருக்கிறதாய் நினைக்கும் பட்சத்தில் அதை குறிலாகப் பாடவைத்திருக்க வேண்டும் பாடகரை.
மொழிக்கு செய்யும் இரண்டகம்: சில இடங்களில் சில ஒப்புரவுகள் செய்வது தவிர்க்க இயலாதுதான் என்றாலும், இவ்வளவு அப்பட்டமான சிதைவை நியாயப்படுத்தவே முடியாது. இது மொழிக்குச் செய்த இரண்டகம். சிலர் விளக்கச் சொல்லி கேட்பதால் அதையும் இங்கேயே சேர்த்து விடுகிறேன். இந்த சந்தம் -தன்னன்னா தன்னன்னா – தன தன்னன் னானன் னானா இரண்டாவது வரியின் இரண்டாவது சீர் “னானன்..” ‘னா’ என்கிற நெடிலுடன் தொடங்குகிறது.
அதற்கு எழுதப்பட்டிருக்கிற ‘எழும்’ என்பது குறிலுடன் தொடங்குகிறது. அதை இந்தப் பாடலில் பாடியிருப்பது போல சமத்தில் பாடினால் நெடிலாக மட்டுமே பாட இயலும். அதைச் சரி செய்ய விழைந்தால், சமம் தள்ளிப் பாடினால் குறிலாக ஒலிக்கை வைக்க இயலும். இங்கே பிழையாக எழுதப்பட்டு, பிழையாகவே பாடப்பட்டிருக்கிறது என்பதுதான் செய்தி. குறில்-நெடில் என்பவையே மொழியின் அடிப்படை. கவிஞர்கள் சந்தத்துக்கு பாடல் எழுதும்போது இதுதான் அவர்களது மிகப்பெரிய சவால். எல்லா நல்ல கவிஞரும் பிழையின்றி எழுதுபவர்தான்.