சென்னை: Chinnanjiru Nilave Song Video (சின்னஞ்சிறு நிலவே பாடலின் ஒரு நிமிட வீடியோ) பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் சின்னஞ்சிறு நிலவே பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கென்று தலைமுறைகள் கடந்தும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார் மணிரத்னம். அவருக்கு லைகா துணை நிற்க படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது.
பொன்னியின் செல்வன் 1: ஐந்து பாகங்கள் கொண்ட நாவலை இரண்டு பாகங்களாக சுருக்கி திரைப்படம் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகமானது கடந்த வருடம் வெளியாகி 500 கோடி ரூபாய் வசூலித்தது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அருண்மொழி சோழன் கடலுக்குள் விழுவது போலவும், அவரை ஊமை ராணி காப்பாற்றுவது போலவும் முதல் பாகம் முடிவடைந்திருந்தது. படக்குழு எதிர்பார்த்த வெற்றியை முதல் பாகம் பெற்றது.
பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்: முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. கமல் ஹாசன், சிம்பு, பாரதிராஜா, குஷ்பூ என ஏராளமானோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். படத்தின் மீது ரசிகர்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். படத்துக்கான டிக்கெட் புக்கிங் ஜோராக நடந்துவருகிறது.

லிரிக்கல் வீடியோ: இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் 2வில் இடம்பெற்றிருக்கும் சின்னஞ்சிறு நிலவே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுத ஹரிசரண் பாடியிருக்கிறார். இந்தப் பாடலானது நந்தினியையும், ஆதித்ய கரிகாலனையும் மையப்படுத்தி படத்தில் இடம்பெற்றிருக்கும் என்ற கருத்து ரசிகர்களிடையே எழுந்தது.
ஒரு நிமிட வீடியோ: இந்நிலையில் சின்னஞ்சிறு நிலவே பாடலின் ஒரு நிமிட வீடியோவை படக்குழு இப்போது வெளியிட்டிருக்கிறது. நினைத்தபடியே இந்தப் பாடலானது நந்தினிக்கும், ஆதித்த கரிகாலனுக்கும் உருவாக்கப்பட்டுள்ளது. பாடலின் காட்சிகளில் சிறு வயது நந்தினியும், சிறு வயது ஆதித்த கரிகாலனும் தோன்றுகின்றனர். தெய்வ திருமகள் படத்தில் நடித்த பேபி சாரா சிறு வயது நந்தினியாக தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஒரு நிமிட வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சூடுபிடிக்கும் புரோமோஷன்: முன்னதாக, படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக விக்ரம் (ஆதித்த கரிகாலன்), ஜெயம் ரவி (அருண்மொழி சோழன்), கார்த்தி (வந்திய தேவன்), த்ரிஷா (குந்தவை), ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா (வானதி) ஆகியோர் தனி விமானம் மூலம் பறந்து பறந்து புரோமோஷன் செய்துவருகின்றனர். நேற்று ஹைதராபாத்தில் நடந்த புரோமோஷனில் படத்தின் இயக்குநர் மணிரத்னமும் கலந்துகொண்டார்.