வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சான்பிரான்சிஸ்கோ: வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய, ‛டைட்டானிக்’ பயணியர் கப்பலின் பாகங்களை பார்வையிட சென்ற ‛டைட்டன்’ என பெயரிடப்பட்ட நீர்மூழ்கி கப்பல் வெடித்துச் சிதறியதாகவும், அதில் பயணித்த 5 தொழிலதிபர்களும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த 1912 ம் ஆண்டு பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகள், கடனா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் மூழ்கிக் கிடக்கிறது. ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
இதற்காக ‛டைட்டன்’ என்ற சிறப்பு நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரு பைலர் 4 பயணிகள் என 5 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்தப் பயணத்திற்கு 2 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பயணத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தானை சேர்ந்த 5 கோடீஸ்வரர்கள் பங்கேற்றனர். டைட்டன் நீர் மூழ்கி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணம் தொடங்கிய 1:45 மணி நேரத்தில் தகவல் தொடர்பு துண்டானது. இதனையடுத்து அந்த கப்பலை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
நீர்மூழ்கி கப்பலில் உள்ள ஆக்சிஜன் காலியாகி உள்ளது. நீர்மூழ்கி கப்பலின் அழுத்த அறை வெடித்து சிதறியுள்ளதாக அமெரிக்க கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதனால், அதில் பயணித்த 5 தொழிலதிபர்களும் உயிரிழந்தனர்.
உடைந்த டைட்டன் கப்பலின் பாகங்கள், ‛டைட்டானிக்’ கப்பலை சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் ஐந்து பாகங்களாக நீர்மூழ்கி கப்பல் சிதைந்து கிடப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அந்த நீர்மூழ்கி கப்பலில் பயணித்தது ஹமீஸ் ஹர்டிங்(58) பால் ஹென்றி நார்கோயலட்(77), ஸ்டாக்டன் ருஷ்(61) மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஷஜாதா தாவூத்(48), இவரது மகன் சுலேமான் தாவூத்(19) ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து அவர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement