வாஷிங்டன்: அமெரிக்காவில், முன்னணி தொழில் நிறுவன சி.இ.ஓ.க்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபை வளாகத்தில் நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். நேற்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
இரு தலைவர்களும் தனியாக ஆலோசனை நடத்தினர். பிறகு, இரு நாடுகளின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அமெரிக்காவின் ஜி.இ.ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் போர் விமான இன்ஜின்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்நிலையில், இன்று இந்திய மற்றும் அமெரிக்க தொழில்நிறுவன சி.இ.ஓக்கள் கூட்டம் வெள்ளை மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய இருவரும் இணைந்து பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் சத்திய நாதெல்லா, கூகுள் (ஆல்பபெட்) நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், நாசா நிர்வாகி பில் நெல்சன், ஓப்பன் ஏஐ சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன், ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக், ஃப்ளெக்ஸ் நிறுவன சி.இ.ஓ ரேவதி அத்வைதி, ஏ.எம்.டி நிறுவன சி.இ,ஓ லிசா சு, துல்கோ எல்எல்சி நிறுவனர் தாமஸ் டல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், ஜெனரல் கேடலிஸ்ட் நிறுவன சி.இ.ஓவும் எம்.டியுமான ஹேமந்த் தனேஜா, FMC கார்ப்பரேஷன் தலைவர் மார்க் டக்ளஸ், பிளானட் லேப்ஸ் சி.இ.ஓ வில் மார்ஷல், மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, Zerodha & True Beacon இணை நிறுவனர் நிகில் காமத், 3rdiTech இணை நிறுவனர் விருந்தா கபூர் உள்ளிட்ட டெக் நிறுவன நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னணி டெக் நிறுவன தலைமை நிர்வாகிகளுடன் உரையாடிய பிரதமர் மோடி, தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பு ஏற்பாடுகளுக்காகவும், நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காகவும், அமெரிக்க அதிபர் பைடனுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், இந்தியாவும் அமெரிக்காவும் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன என்றும், சி.இ.ஓக்களின் சந்திப்பு எதிர்கால வளர்ச்சிக்கான பிரகாசமான பாதையைக் காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.
இந்த சி.இ.ஓக்கள் கூட்டத்தில் ஸ்டார்ட் அப்கள் முதல் மிகப்பெரிய நிறுவனங்கள் வரை பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, “இரண்டும் இணைந்து ஒரு புதிய உலகத்தை உருவாக்கி வருகின்றன” எனத் தெரிவித்தார்.