
மாமன்னன் பட டைட்டிலில் உதயநிதிக்கு நான்காவது இடம்
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள படம் மாமன்னன். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் பஹத் பாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் நகைச்சுவையிலிருந்து மாறுபட்டு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் வடிவேலு. ஏ.ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 29ஆம் தேதி இந்த படம் ரிலீசாகிறது.
வழக்கமாக படத்தில் கதாநாயகனின் பெயர் தான் டைட்டில் கார்டில் முதலிடம் பெறும். ஆனால் மாமன்னன் படத்தில் டைட்டில் கார்டில் முதல் பெயராக வடிவேலுவின் பெயரும் அதற்கு அடுத்ததாக பஹத் பாஸில், மூன்றாவதாக கீர்த்தி சுரேஷ், அதைத் தொடர்ந்து நான்காவதாகத் தான் உதயநிதியின் பெயர் இடம் பெறுகிறதாம். இந்த வரிசையில் தான் பெயர்கள் இடம் தர வேண்டும் என இயக்குனர் மாரி செல்வராஜிடம் உதயநிதியே கண்டிப்பாக கூறிவிட்டாராம்.
சமீபத்தில் வடிவேலு, உதயநிதி இருவரும் மாமன்னன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக அளித்த பேட்டியில் இந்த தகவலை வடிவேலுவே வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து உதயநிதி கூறும்போது படத்தில் மாமன்னன் வடிவேலு தான் என்பதால் முதலில் அவர் பெயர், அதற்கடுத்து சீனியாரிட்டி மற்றும் நடிப்பு என்கிற வரிசையில் இப்படித்தான் பெயர்கள் போட வேண்டுமென சொல்லிவிட்டதாக கூறியுள்ளார். ஒரு படத்தின் ஹீரோ அதுவும் அவரே தயாரிப்பாளராக இருந்தும் கூட இப்படி தனது பெயரை நான்காவதாக போட்டுக் கொள்வது இதுவரை தமிழ் சினிமாவில் நடந்திருக்குமா என தெரியவில்லை.