மாஸ்கோ:உக்ரைனுடன் போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யாவில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக, தனியார் ராணுவ அமைப்பு, கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது. ராணுவ அமைச்சர் மற்றும் ராணுவ தளபதிக்கு எதிராக, இந்த அமைப்பு போர்க்கொடி துாக்கியுள்ளதுடன், தலைநகர் மாஸ்கோவை நோக்கி விரைந்துள்ளதால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில் துவங்கிய இந்த தாக்குதல், தற்போதும் தொடர்கிறது. உக்ரைனின் எதிர் தாக்குதல்களால், ரஷ்ய ராணுவம் நிலைகுலைந்துள்ளது.
ரஷ்யாவில் செயல்படும் தனியார் ராணுவமான, ‘வாக்னெர்’ அந்த நாட்டின் துணை ராணுவப் படையாகக் கருதப்படுகிறது.
இந்தப் படையும், உக்ரைனுக்கு எதிராக களமிறக்கப்பட்டது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றுவதற்கு, இந்த தனியார் ராணுவ அமைப்பே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வாக்னெர் ராணுவப் படையின் தலைவர் யேவ்கெனி பிரிகோஷின், ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக திடீரென போர்க்கொடி துாக்கியுள்ளார்.
உக்ரைனில் இருக்கும் தன் படை வீரர்களை, ரஷ்யாவுக்கு திரும்பும்படி கூறியுள்ளார். இந்தக் கூலிப் படையினர், ரஷ்யாவின் தெற்கே உள்ள ரோட்ஸ்வான் டான் பகுதியில் உள்ள ராணுவ முகாமை கைப்பற்றிஉள்ளனர்.
தலைநகர் மாஸ்கோவில் இருந்து, 1,000 கி.மீ., தொலைவில் இந்தப் பகுதி அமைந்துள்ளது. தன் படை வீரர்களை, மாஸ்கோ நோக்கி முன்னேறும்படி பிரிகோஷின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில், ‘வீடியோ மற்றும் ஆடியோ’ செய்திகளை அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
அவற்றில் அவர் கூறியுள்ளதாவது:
உக்ரைன் ராணுவத்தை சமாளிக்க முடியாமல், ரஷ்ய ராணுவம் திணறுகிறது. ரஷ்ய ராணுவத்துக்கு உதவுவதற்காக எங்களை அனுப்பி வைத்தனர். ஆனால் ரஷ்ய ராணுவம், எங்கள் மீதே தாக்குதல் நடத்தியுள்ளது; எங்களை பலிகடாவாக்க முயற்சிக்கிறது.
எங்களுக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்களை தராததுடன், எங்கள் மீதே ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது; இதை ஏற்க முடியாது.
இதற்கு காரணமான ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு, ராணுவ தளபதி ஜெனரல் வலேரி ஜெரசிமோவ் ஆகியோரை விட மாட்டோம்.
இது ராணுவப் புரட்சியோ, ஆட்சியை கவிழ்க்கும் புரட்சியோ அல்ல. லஞ்சம், ஊழலில் திளைத்துள்ள ராணுவத்திடம் இருந்து, நாட்டை காப்பாற்றும் சுதந்திர போராட்டம். நாங்கள் ரஷ்யாவின் சுதந்திர போராட்ட வீரர்கள். எங்கள் படையில் உள்ள, ௨௫ ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டார்கள்; நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் தயங்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த அமைப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி, ராணுவத்துக்கு அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் அவர் கூறியுள்ளதாவது:
நம் நாட்டுக்கு எதிராகச் செயல்படும் இந்த துரோகிகள், தேச விரோதிகளை விட மாட்டோம். முதுகில் குத்திய இவர்கள் மீதான இந்த நடவடிக்கை, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையாகும்.
எந்த நிலையிலும், ரஷ்யாவை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ரஷ்யாவின் வோரோன்ச் என்ற நகரில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கில், மர்ம நபர்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால், அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்னெர் அமைப்பின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், போர் விமானங்களை ரோட்ஸ்வான் டான் பகுதிக்கு, ரஷ்ய ராணுவம் அனுப்பி வைத்துள்ளது. ரஷ்ய ராணுவ ெஹலிகாப்டர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பெலாரஸ் போன்ற நட்பு நாடுகளிடமும், ரஷ்யா உதவி கோரியுள்ளது.
இந்த திடீர் உள்நாட்டு கலவரத்தால், ரஷ்யாவில் அடுத்து என்ன நிகழுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலால், உக்ரைன் மீதான போரிலும் தாக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது. அதிபர் புடினின் ஆட்சி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சமும் ரஷ்யாவில் நிலவுகிறது.
தீமை அழிவை தரும்!
மிக நீண்ட காலமாக தன் பலவீனத்தை, முட்டாள்தனத்தை மறைக்க ரஷ்யா முயற்சித்து வருகிறது. ரஷ்யா முழுமையாக பலவீனமடைந்துள்ளதையே, தற்போதைய சம்பவங்கள் காட்டுகின்றன. கூலிப் படையை எங்கள் மீது ரஷ்யா ஏவியது. அந்த தீமை தற்போது ரஷ்யாவையே அழிக்கிறது.
வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உக்ரைன் அதிபர்
சமையல்காரர்
*ரஷ்ய அதிபருக்கு தற்போது குடைச்சலை ஏற்படுத்தியுள்ள யேவ்கெனி பிரிகோஷின், 61, முன்பு உணவுகள் சமைத்து தரும் நிறுவனத்தை நடத்தி வந்தார்
*மிகச் சிறந்த சமையல் நிபுணரான இவர், அதிபர் புடினுடன் நெருக்கமாக இருந்தவர்
*அதிபர் புடினின் உதவியுடன், வாக்னெர் என்ற தனியார் ராணுவ அமைப்பை இவர் உருவாக்கினார். இது, புடினின் தனிப்பட்ட ராணுவமாகவும் பார்க்கப்பட்டது. மேலும், ரஷ்யாவின் துணை ராணுவப் படையாகவும் கருதப்படுகிறது
*கடந்தாண்டு இந்த வாக்னெர் அமைப்பு, ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ராணுவத்துடனும் ஒப்பந்தம் செய்தது
*இந்த ஒப்பந்தம் தொடர்பாக, ராணுவ அமைச்சர் மற்றும் ராணுவ தளபதியுடன், பிரிகோஷினுக்கு பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது
*முதலில் இந்த அமைப்பில், 5,000 பேர் உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், 50 ஆயிரம் வீரர்கள் இதில் உள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்