புதுடெல்லி: காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள்நேற்று முன்தினம் பாட்னாவில் கூடினர். இதில் அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனிடையே முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் அவசர சட்டம் தொடர்பான தனது தனிப் பிரச்சினையை எழுப்பினார். இதில், காங்கிரஸின் முடிவை அறிவது அவரது நோக்கமாக இருந்தது. அவசர சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க தாங்கள் எடுத்த முயற்சிக்கு பலனில்லை என்று கூறி, கேஜ்ரிவால் வாக்குவாதத்தை தொடங்கினார். அப்போது இதற்கான பதிலை தங்கள் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளிப்பார் என ராகுல் கூறினார்.
இதையடுத்து பேசிய கார்கே, “இதுபோன்ற ஜனநாயகம் அற்ற மசோதாவை கொண்டுவரும் பாஜகவிற்கு நாங்கள் ஆதரவளிப்போம் என ஆம் ஆத்மியினர் கருதுவது வியப்பை அளிக்கிறது. இப்பிரச்சினையில் பாஜகவுடன் காங்கிரஸும் ரகசியமாக இணைந்து திட்டமிடுவதாக அக்கட்சியினர் கூறிய புகாருக்கு மன்னிப்பு கோர வேண்டும்” என பதில் அளித்தார்.
இதற்கு முதல்வர் கேஜ்ரிவால், “அப்படியெனில் உங்கள் முடிவை அனைவருக்கும் முன்பாகக் கூறலாமே?” எனக் கேட்டிருக்கிறார். இதற்கு கார்கே, “இதுபோன்ற மசோதாக்கள் விவகாரத்தை நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கிய பிறகு அதற்கான எம்.பி.க்கள் குழு கலந்துபேசி முடிவு எடுக்கும்” எனக்கூறி பிரச்சினையை முடிக்க முயன்றார். இந்த வகையில், இருவர் இடையே சுமார் 10 நிமிடங்கள் நீண்ட மோதல் ஏற்பட்டு,அங்கிருந்த தலைவர்களை சங்கடத்தில் ஆழ்த்தியது.
இதனால், எதிர்க்கட்சிகள் கூட்டம் தோல்வி அடைந்ததாக கருதப்பட்டு விடும் என்ற அச்சமும் பலருக்கு எழுந்தது. அப்போது, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா தலையிட்டு மோதலை திறமையுடன் முடித்து வைத்தார்.
அப்போது அனைவர் முன்பாகஅவர் பேசுகையில், “2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்ப்பது குறித்து ஆலோசிக்க இங்கு கூடியுள்ளோம். இதில் டெல்லி மாநிலப் பிரச்சினையை பேச முடியாது. இதற்காக நீங்கள் டெல்லியில் ராகுலுடன் தேநீர் அல்லது உணவிற்காக அமர்ந்து பேசித் தீர்க்கலாம். இதற்கு மேல் பிரச்சினை வந்தால் நான்தான் இருக்கிறேனே?” என கேஜ்ரிவாலுக்கு ஆறுதல் அளித்துள்ளார்.
இதையடுத்து அங்கு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்காக, கூட்டம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் முதல்வர் மம்தாவை வாழ்த்தியும், பாராட்டியும் உள்ளனர்.
எனினும், திருப்தி அடையாத கேஜ்ரிவால், தங்கள் சக நிர்வாகியான பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானுடன் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.