சென்னை: தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லும் அனைவருக்குமான அரசாக உள்ளது. இதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கம். ஜி20 தலைமையை இந்தியா ஏற்றது பெருமையாக உள்ளது. கடந்த 9 வருடத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அனைத்து துறைகளிலும் நல்ல முறையில் பணியாற்றி இருக்கிறது.
தமிழகத்தில் எங்கள் கூட்டணி கட்சி அரசு இல்லாதபோதிலும், எங்களுடைய மாநிலமாகக் கருதி அனைத்து திட்டங்களையும் மற்ற மாநிலங்களுக்கு வழங்குவது போல வழங்கி வருகிறோம்.
தமிழகத்தில் சில இடங்களில் பட்டியலின மக்களுக்கு எதிராக வன்முறை நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விவகாரத்தில் (குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம்) விசாரணை நடைபெறுகிறது. விழுப்புரத்தில் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காதது வருத்தம் அளிக்கிறது.
அனைத்து கட்சி கூட்டம்: இதுபோன்ற சம்பவங்களில் சமூகங்களுக்கு இடையே நல்லுறவை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்த வேண்டும். மேலும், தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை ஒடுக்கி, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கன்னியாகுமரியில் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும். இதுதொடர்பாக கோரிக்கை மனுவை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியிருக்கிறோம்.
நரேந்திர மோடியை எதிர்கொள்ள ஒன்றுதிரண்ட 15 அரசியல் கட்சிகளின் சித்தாந்தங்கள் வேறுவேறு. இதன் காரணமாக, அவர்கள் ஒன்று சேருவதற்கு வாய்ப்பு இல்லை.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களைப் பிடித்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவின் தலைவர்கள் ஒன்றுசேர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.