ரஷ்யாவுக்கு இது புதுசு இல்லையாமே.. வாக்னர் குழுவிற்கு முன்பே இருமுறை கலகத்தை சந்தித்த ஆட்சியாளர்கள்

மாஸ்கோ: ரஷ்யாவில் ராணுவத்துக்கு உதவியாக இருந்த தனியார் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக கலகம் செய்தது. இதனால், ரஷ்யாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தற்போது பெலராஸ் உதவியால் பிரச்சினை தீர்ந்துள்ள நிலையில், ரஷ்யா ஏற்கனவே இருமுறை கலகத்தை சந்தித்து உள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழுவை பயன்படுத்தி வந்தது. கூலிப்படை போல இந்தக் குழுவை ரஷ்யா பயன்படுத்தியது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்திற்கு உதவி கரமாக இருந்த வாக்னர் குழு , ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியது.

உக்ரைன் போரில் ரஷியா தங்களுக்கு சரியான ஆயுதங்களை வழங்கவில்லை எனவும், தங்களது அமைப்பை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேரை ரஷிய ராணுவம் கொன்றுள்ளதாகவும் வாக்னர் குழு குற்றம்சாட்டி கலகத்தை தொடங்கியது. இதனால், என்ன செய்வதென்று புதின் கையை பிசையை தொடங்கினார். ஒரு கட்டத்தில் மாஸ்கோ நகரை நோக்கி வாக்னர் குழு முன்னேற தொடங்கியது.

பின்வாங்கிய வாக்னர் குழு: இதனால் ரஷ்யாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ரஷ்யாவின் எல்லையில் அமைந்துள்ள ரோஸ்டோவ் நகரையும் இந்தக் குழு முற்றுகையிட்டது. எனினும் பெலாரஸ் அதிபர் இந்த விவகாரத்தில் தலையிட்டதால வாக்னர் குழு தனது முடிவை மாற்றிக்கொண்டது. ரஷ்ய ராணுவத்துடனான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட வாக்னர் குழு பின் வாங்க ஒப்புக் கொண்டது.

மாஸ்கோவுக்கு முன்னேற, 200 கிலோமீட்டர்கள் தொலைவே இருந்த நிலையில், வாக்னர் ஆயுதக் குழு பின்வாங்கியது ரஷ்ய அதிபர் புதினுக்கு பெரும் நிம்மதியை கொடுத்தது. முன்னதாக வாக்னர் குழு கிளர்ச்சியை தொடங்கியதால் தொடர்ந்து முன்னேறுவதை தடுக்கும் நோக்கில் ரஷ்யாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இது முதல் முறை அல்ல: மக்கள் தேவையின்றி வெளியே சுற்ற வேண்டாம் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வாக்னர் குழுவுடன் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் பின் வாங்கி சென்றதால் சாலைகளில் போக்குவரத்து விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக ரஷ்யாவின் மத்திய சாலை முகமை அறிவித்தாக செய்திகள் வெளியாகியது. ஆனால் சிறிது நேரத்திலேயே இதை மறுக்கும் விதமாக செய்திகள் வந்தன.

அதாவது, ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் துலா பிராந்திய பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீடிப்பதாக ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய கலகம் சர்வதேச அளவில் பெரிதும் கவனிக்கப்பட்டது. எனினும் ரஷ்யா இது போன்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை சந்தித்தது இது முதல் முறை அல்ல. சோவியத் ரஷ்யா காலத்தில் அதாவது கடந்த 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு நான்கு மாதங்களுக்கு முன்பாக ஒரு கலகத்தை ரஷ்யா சந்தித்தது.

1993-ம் ஆண்டில் கிளர்ச்சி: கம்யூனிஸ்ட் கடுமைவாதிகள் 15 குடியரசுகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கும் அதிகார ஒப்பந்தத்தை தடுத்து அதிகாரத்தை கைப்பற்ற நினைத்த சதி முறியடிக்கப்பட்டது. அப்போது அதிபராக இருந்த மிக்கைல் கோர்பசேவ் ஆட்சி கவிழ்ப்பில் இருந்து தப்பினார். அதற்கு அடுத்த இரண்டு வருடங்களில் மீண்டும் ரஷ்யா மீண்டும் கிளர்ச்சியை சந்தித்தது.

கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை கிளர்ச்சி ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கடுமைவாதிகள் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது ரஷ்யாவின் நாடளுமன்றம் மீது டாங்கிகள் கொண்டு தாக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கடுமைவாதிகள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து யெல்ட்சினை நீக்கி, துணை அதிபர் அலெக்சாண்டர் ருட்ஸ்கோயை அதிபராக்க முயற்சி மேற்கொண்டனர்.

18 மாடி கட்டிடம் தகர்ப்பு: ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அவர்களை தடுத்தனர். எனினும், நாடாளுமன்றத்திற்கு வெளியே மாஸ்கோ மேயர் அலுவலகம் மற்றும் டெலிவிசன் மையத்தை கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்தார். இதையடுத்து ராணுவ உதவியுடன் கிளர்ச்சியாளர்களை யெல்ட்சின் தாக்கினார்.

அக்டோபர் 4-ந்தேதி கலகக்காரர்களிருந்த 18 மாடி கட்டிடம் தகர்க்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவர்கள், போராளிகள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதில் 148 பேர் உயிரிழந்தனர். எனினும் பாராளுமன்றத்தில் யெல்ஸ்டின் ஆதரவாளர்கள் தோல்வி அடையவே ஆட்சிக்கு எதிராக கலகம் செய்தவர்க்ளுக்கு பொதுமன்னிப்பு வழங்க எம்.பிக்கள் வாக்களித்தனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.