கெய்ரோ: எகிப்து சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். எகிப்தில் பிரமிடு, அல்-ஹக்கீம் மசூதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டார் பிரதமர் மோடி.
இந்திய பிரதமர் மோடி 4 நாட்கள் அமெரிக்க பயணம் நிறைவடைந்ததும், எகிப்து அதிபர் அப்துல் பஹத் எல் சிசியின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி எகிப்து நாட்டுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். அவர் எகிப்தில் இரு தினங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
எகிப்து நாட்டுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். நேற்று மதியம் எகிப்து சென்றடைந்த அவரை, விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் முஸ்தபா மத்தவுலி உற்சாகத்துடன் வரவேற்றார். ராணுவ அணிவகுப்பு உள்பட சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.
எகிப்தின் ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். உலகப் போரின்போது வீர மரணம் அடைந்த 3,799 இந்திய படைவீரர்கள் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தைப் பிரதமர் மோடி பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.
மேலும், 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இந்தியாவைச் சேர்ந்த தாவூதி போரா சமூகத்தினரால் புதுப்பிக்கப்பட்டுள்ள அல்-ஹக்கீம் மசூதியை பிரதமர் மோடி பார்வையிட்டார். மசூதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படம், பொருட்கள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
அல்-ஹக்கீம் மசூதி நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கெய்ரோவில் உள்ள மசூதிக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, கிசா பிரமிடுகளை பார்வையிட்டு, புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்திய பிரதமர் மோடிக்கு எகிப்து அதிபர் சிசி, ஆர்டர் ஆப் தி நைல் என்ற விருது வழங்கி இன்று கவுரவித்தார். இது எகிப்து நாட்டின் மிக உயரிய விருதாகும். இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமாக வேரூன்றிய நட்புறவை இந்த அங்கீகாரம் அடையாளப்படுத்துகிறது என பிரதமர் மோடி பேசினார்.
இந்த பயணத்தின்போது, வருகிற செப்டம்பரில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டுக்கு வரும்படி எகிப்து அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார். இதைத்தொடர்ந்து, பயணத்தை முடித்துக்கொண்டு கெய்ரோவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி.