"ராங் கால் போட்டா ராங்கா பேசுவியா..?" அப்பாவி இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. அய்யோ

கள்ளக்குறிச்சி:
ராங் நம்பருக்கு கால் செய்த தகராறில் ஏதும் அறியாத அப்பாவி இளைஞர் சின்னாபின்னமான சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது. அவரை கட்டிவைத்து கொடூரமாக தாக்கியதில் அந்த இளைஞர் படுகாயம் அடைந்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மயனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (26). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிய சிம் கார்டு ஒன்றை வாங்கியுள்ளார். இதனிடையே, அதே ஊரைச் சேர்ந்த ஆகாஷ் (28) என்ற இளைஞர் அந்த எண்ணுக்கு தவறுதலாக போன் செய்திருக்கிறார். அப்போது இது ராங் நம்பர் என ஐயப்பன் கூறிய நிலையில், மதுபோதையில் இருந்த ஆகாஷ் அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அந்தப் பகுதியில் ஆகாஷ் செல்வாக்குமிக்கவர் என்பதால் ஐயப்பனும் ஏதும் பேசவில்லை.

ஆனால், அடுத்தடுத்த நாட்களில் ஐயப்பனின் எண்ணுக்கு போன் செய்து கெட்ட வார்த்தைகளில் திட்டுவதை ஆகாஷ் வழக்கமாக வைத்து வந்திருந்தார். ஆகாஷின் தொந்தரவு தாங்க முடியாததால் அந்த சிம் கார்டை, குபேந்திரன் என்பவரிடம் விற்றுவிட்டார். இந்த விவரம் தெரியாத ஆகாஷ், அந்த எண்ணுக்கு நேற்று இரவு வழக்கம் போல போன் செய்து திட்டியுள்ளார். “ஏன்டா.. ராங் காலும் பண்ணிட்டு ராங்கா வேற பேசுவியா” எனக் கேட்டு, பதிலுக்கு ஆகாஷின் காதில் ரத்தம் வரும் வரையிலான கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்தார் குபேந்திரன்.

இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், தன்னை பற்றி தெரிந்திருந்தும் ஐயப்பன் இப்படி பேசுகிறானா என நினைத்து பொறுமினார். பின்னர் அடுத்த நாள் காலை (இன்று) நேராக ஐயப்பனை தேடி வந்த ஆகாஷ், அவரை அங்குள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்து கம்பால் கடுமையாக தாக்கியுள்ளார். எதற்காக தான் அடி வாங்குகிறோம் எனத் தெரியாமலேயே அடி வாங்கிய ஐயப்பனுக்கு உடல் முழுவதும் ரத்தம் கொட்டியது.

இந்நிலையில், ஐயப்பனின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு சென்று அவரை மீட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், தப்பியோடிய ஆகாஷை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது தான் மேற்கூறிய தகவல்கள் தெரியவந்தது. ஆகாஷ் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஐயப்பன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.