சென்னை: Vadivelu (வடிவேலு) ஏ.ஆர்.ரஹ்மான் கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுத்தது போல் தனக்கு பாடல் பாட சொல்லிக்கொடுத்ததாக வடிவேலு தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். அந்தப் படம் சரியாக போகவில்லை. இதனையடுத்து அவர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2, மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். சந்திரமுகி 2 ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. மாமன்னன் படம் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
சிறந்த பாடகர்: வடிவேலு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் ஜொலிப்பார். இளையராஜாவின் இசையில் எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும் என்ற பாடலை முதன்முதலாக பாடினார். அதன் பிறகும் சில பாடல்களை பாடிய அவர் மாமன்னன் படத்தில் மலையிலதான் தீப்பிடிக்குது ராசா பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியிருக்கிறார். அண்மையில் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வடிவேலுவுக்கு பாராட்டும் கிடைத்தது.
வடிவேலு பேட்டி: இந்நிலையில் மாமன்னன் படத்தில் பாடல் பாடிய அனுபவம் குறித்து சமீபத்தில் பேசிய வடிவேலு, “எட்டணா இருந்தா எட்டூரும் என் பாட்டை கேட்கும் பாடலை நான் பாடுகையில் இளையராஜா ஸ்டூடியோவில் இல்லை. அவர் நான் பாடியதை பக்கத்தில் இருந்து பார்க்கவில்லை. அவரது உதவியாளர்கள்தான் அந்தப் பாடலை ரெக்கார்ட் செய்தனர். ஆனால் ஏ.ஆ.ரஹ்மான் அப்படி இல்லை. பக்கத்தில் இருந்து கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுப்பது போல் ஒவ்வொரு வரியையும் சொல்லிக்கொடுத்து பாட வைத்தார்.
இளையராஜாவிடம் தொடக்கம்: இளையராஜாவிடம் தொடங்கிய இசை பயணம் இப்போது ஏ.ஆர்.ரஹ்மானிடம் வந்து நிற்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடுவதற்கு முதலில் நான் ரொம்பவே பயந்தேன். ஆனால் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் ஆகியோர் என்னை கட்டாயப்படுத்தி ஒத்துக்கொள்ள வைத்தனர். அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு சொல்லிக்கொடுத்தார். அதன் காரணமாகத்தான் அந்தப் பாடல் ஹிட்டாகியிருக்கிறது” என்றார்.
சென்சார் முடிந்தது: படம் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில் படத்துக்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழை வழங்கியிருக்கிறது. படத்துக்கான டிக்கெட் புக்கிங்கும் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. மாரி செல்வராஜ் சென்சிட்டிவான விஷயங்களை படமாக்குவார் என்பதால் அவரது இயக்கத்தில் வடிவேலுவின் நடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றனர். அதேபோல் இந்தப் படத்தின் கேரக்டர் நிச்சயம் தனக்கு பெயர் வாங்கிக்கொடுக்கும் என வடிவேலுவும் பல பேட்டிகளில் குறிப்பிட்டுவருகிறார்.
என்ன கதை?: மாமன்னன் படத்தின் கதை மேற்கு மாவட்ட அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக மாரி செல்வராஜ் கூறியிருக்கிறார். படத்தின் ட்ரெய்லரிலும் வடிவேலுவை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தில் வடிவேலு வேறு மாதிரிதான் இருப்பார் என்பது உறுதியாகியிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துவருகின்றனர். மேலும் மாமன்னனுக்கு பிறகு வைகைப்புயல் கோலிவுட்டில் மீண்டும் வீசப்போகிறது என அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையும் பிறந்திருக்கிறது.